டாக்டா். ஆா். கண்ணன்
[responsivevoice_button voice=”Tamil Male”] M.S., DNB(SGE), FICS(Gastro)., FAIS., FMAS., FIAGES., FACRSI., FIMSA.,DMAS (France)., FALS (UGI)., FALS(HPB)., FALS (Colorectal)., FALS (Hernia) இரைப்பை, குடல், கல்லீரல், புற்றுநோய் மற்றும்லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்
[responsivevoice_button voice=”Tamil Male”] நம் ஜீரண மண்டலத்தின் கடைசிப் பகுதியான ஆசனவாயில் ஏற்படும் பல பிரச்சனைகளில் மூலமும் (Piles), ஆசனவாய் வெடிப்பு (Fissure in ano) மற்றும் பவுத்திரம் (Fistula) முக்கியமானவை. இந்த மாதம் நாம் ஆசனவாய் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் பார்ப்போம்.
ஆசனவாய் சுமார் 3 முதல் 4 செ.மீ நீளமுடையது. இதில் கடைசியில் சுமார் 5-10 mm அளவு ஆசனவாயில் ஏற்படும் வெடிப்பையே நாம் ஆசனவாய் வெடிப்பு (Fissure in ano) என்கிறோம்.
ஆனால் ஆசனவாய் பகுதியில் எந்தப் பிரச்சனை வந்தாலும் என்னிடம் வரும் நோயாளிகள், மூலம் (Piles) வந்துவிட்டது டாக்டர் என்றே கூறுவார்கள். ஏனெனில், அவர்களைப் பொருத்தவரை ஆசனவாயில் எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை மூலம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இந்த மூன்று பிரச்சனைகளிலும் மலம் வெளியேறும் போது வலி, இரத்தம் வெளியேறுதல், ஆசனவாய் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும்.
ஆனால் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. எனவே, என்ன பிரச்சனை தான் ஏற்பட்டு இருக்கிறது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
ஆசனவாய் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்
1. மலச்சிக்கல் (மலம் மிக கெட்டியாக வெளியேறுதல்)
2 .குடல்புண் பிரச்சனை (Crohn’s Disease)
3. குழந்தை பிறக்கும் போது அடிவயிற்றில் ஏற்படும் குழந்தையின் அழுத்தத்தாலும் ஆசனவாய் பகுதியில் வெடிப்பு ஏற்படும்.
மேற்கூறியவற்றில் மிக முக்கியமானது மலச்சிக்கலாகும். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இதுவே அடிப்படை காரணமாக விளங்குகிறது.
ஆசனவாய் வெடிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
மலக்குடலில் இரு பகுதிகளிலும் மேத்தை (Cushion) போன்ற மெல்லிய தசைப்பகுதி இருக்கிறது. மலத்தை வெளியேற்ற இதன் பங்களிப்பு மிக அவசியம். மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கும் போது இந்த மேத்தை (Cushion) பகுதி அதிகமாக அழுத்தப்படுகிறது. இவ்வாறு மலத்தை முக்கி வெளியேற்றும் நிலை தொடரும் போது அதனால் ஆசனவாய் பகுதியில் வெடிப்பு ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பு கொண்டவர்கள் மலம் கழிக்கும் போது கத்தியால் குத்திக் கிழித்தது போன்ற வலியால் துடிப்பார்கள். ரத்தமும் வரும் இதனையோ ஆசனவாய் வெடிப்பு என்கின்றோம். பொதுவாக இவ்வாறு ஏற்படும் வெடிப்பு ஆசனவாயின் பின்பகுதியில் 90% சதவிகிதமும், முன்பகுதியில் 10% சதவிகிதமும் ஏற்படும்.
வகைகள்
1. உடனடி ஆசனவாய் வெடிப்பு (Acute Fissure in ano)
2. நாட்பட்ட ஆசனவாய் வெடிப்பு (Chronic Fis-sure in ano) என இருவிதமாக வகைப்படுத்தலாம்.
ஆசனவாய் வெடிப்பானது 6 வாரத்திற்குள் மருத்துவ சிகிச்சையின் போது சரியாகுமேயானால் அதனை உடனடி ஆசனவாய் வெடிப்பு என்கிறோம்.
ஆறுவாரத்திற்கு மேற்பட்டு குணமடையாமல் இருக்கும் வெடிப்பு நாட்பட்ட ஆசனவாய் வெடிப்பு என்கிறோம். இதில் வெடிப்புடன் தோல் வீக்கமும் (Sentinel Pile) இருக்கும்.
ஆசனவாய் வெடிப்பின் அறிகுறிகள்
1. ஆசனவாயில் வலி
மலம் கழிக்கும் போது கத்தியால் அருப்பது போன்ற ஒரு வலி ஏற்படும் அதன்பின் நீண்ட நேரத்திற்கு எரிச்சலும் உண்டாகும். இந்த வலியால் சிலர் மலம்கழிக்க பயந்து உணவு உண்பதையே தவிர்ப்பார்கள். இதனால் மலச்சிக்கலானது மேலும் அதிகரித்து இன்னும் ஆசனவாய் வெடிப்பை தீவிரமடைய செய்யும்.
2. இரத்தம் வருதல்
மலத்துடன் வெளிப்படும் இரத்தமானது புண்ணிலிருந்து வரும் இரத்தம் போன்று ஆழ்ந்த சிவந்த நிறத்தில் காணப்படும்.
3. அரிப்பு
ஆசனவாய் பகுதியில் அரிப்பு ஏற்படும் இது தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ காணப்படும்.
ஆசனவாய் வெடிப்பை கண்டறிதல் எப்படி?
1. விரல் பரிசோதனை:
மருத்துவர்கள் நோயாளியின் அறிகுறிகளைக் கொண்டும் ஆசனவாயின் வழியாக விரல் பரிசோதனை மூலமும் இதனை கண்டறிவர்.
2. Prostoscopy பரிசோதனை:
மேலும் ஆசனவாயின் வழியாக Prostoscopy எனப்படும் கருவி செலுத்தி பரிசோதித்து கண்டறியலாம். இதன் மூலமாக ஆசனவாய் வெடிப்பானது வேறு ஏதேனும் காரணத்தினால் உண்டானதா? என்றும் கண்டறியலாம்.
3. Colonoscopy பரிசோதனை:
ஒன்றுக்கும் மேற்பட்ட வெடிப்புகள் இருந்தாலோ அல்லது வெடிப்பானது அரிதான இடத்தில் (பக்கவாட்டில்) காணப்பட்டாலோ வேறு ஏதும் நோய்நிலை, (Crohn’s Disease), உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில், (HIV) அல்லது குடல் காசநோயோ (TB) காரணமாக இருக்கலாம்.
இதனை கண்டறிய Colonoscopy எனப்படும் பரிசோதனை செய்யப்படுகிறது.
குணப்படுத்தும் முறை
மருந்து மூலமும் அறுவை சிகிச்சை மூலமும் சரிசெய்யலாம். பொதுவாக 70-80% ஆசனவாய் வெடிப்பு 4 முதல் 6 வாரங்களில் குணமடைந்து விடும். வலியானது. 2 அல்லது 3 தினங்களில் குறைந்துவிடும். அதற்கு கீழ்க்கண்ட மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை முறை
1. மலச்சிக்கலை சரிசெய்ய வேண்டும்.
2. தேவைப்பட்டால் மலமிளக்கிகளை (Bulic Laxa-tives) எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. வலிக்கு வலி நிவாரணிகளை (Analgesics) எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. ஆசனவாய் வெடிப்பு பகுதியில் மருந்து (Analfate, Smuth) தடவி சரிசெய்யலாம்.
அறுவை சிகிச்சை யாருக்குத் தேவைப்படும்?
திடீர் ஆசனவாய் வெடிப்பு மேற்கூறிய மருத்துவ சிகிச்சையின் மூலம் பெரும்பாலும் சரிசெய்யலாம். ஆனால், நாட்பட்ட ஆசனவாய் வெடிப்பு முற்றிலும் மருந்தால் குணப்படுத்த முடியாது. இதற்கு அறுவை சிகிச்சையை சரியான தீர்வாகும்.
1. பெரும்பாலும் வெடிப்பானது நாட்பட்டு காணப்படுதல், வெடிப்புடன் தோல்வீங்கி இருத்தல்.
2. வலி அதிகமான இருத்தல், இரத்தம் அதிகம் வெளியேறுதல் போன்றவை காணப்படும் போது அது அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம்.
3. Laser மூலம் வெடிப்பினையும் சரிசெய்யலாம்.
4. Lateral Sphincterotomy : ஆசனவாயின் சுறுக்கு தசையை (Sphincter) தளர்த்தும் போது (Sphincterotomy) ஆசனவாயின் அடிப்பகுதியில் அழுத்தம் குறையும் மலமும் எளிதாக வெளியேறும். இதனால் ஆசனவாய் வெடிப்பும் விரைவில் குணமடையும்.
ஆசனவாய் வெடிப்பு வருவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
பெரும்பாலும் இதற்கு முக்கிய காரணமான மலச்சிக்கலை தவிர்த்தால் ஆசனவாய் வெடிப்பினை தவிர்க்கலாம்.
மலச்சிக்கல் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டியவை:
1. ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
2. நார்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக பயன்படுத்த வேண்டும். முக்கியமான ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, பப்பாளி, வாழைப்பழம், பீன்ஸ் மற்றும் பயிறு வகைகளை அதிகமாக உண்ண வேண்டும்.
3. கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
4. உணவு பழக்க வழக்கங்களால் மலச்சிக்கல் சரியாக வில்லையென்றால் Stool Softness (Laxa-tives) போன்றவற்றை எடுத்துக்கொண்டு மலச்சிக்கலை சரிசெய்துக் கொள்ளலாம்.
More Stories
தூக்கத்தை கெடுப்பதில் செல்போன்களுக்கு முக்கிய பங்கு
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!
இதய நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு