சென்னை: சுதந்திர தின அமுதப்பெருவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் இன்று முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அரசு உத்தரவிட்டு உள்ளது. தேசிய கொடி ஏற்றும்போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தேசியக்கொடியினை நல்ல நிலையில் உள்ள கம்பத்தில் அல்லது நேராக உறுதியாக உள்ள கம்பில் (உறுதியான குச்சி) மட்டுமே பறக்க விட வேண்டும். எக்காரணம் கொண்டும் வலைந்த கம்பங்கள் இரும்பு கம்பிகள், குச்சிகளில் பறக்க விடக்கூடாது. மேலும் சாய்வாகவும் பறக்க விடக்கூடாது. கொடியின் மேல் மலர்கள் உட்பட எந்தப் பொருளையும் வைக்கக்கூடாது. அதனை தலையணை உறையாக பயன்படுத்தக்கூடாது. வாகனங்களின் பக்கவாட்டிலோ, முன்புறத்திலோ பயன்படுத்தக்கூடாது. முகக்கவசமாக அணியக்கூடாது. சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த தேசியக்கொடியினை நாம் பயன்படுத்தக்கூடாது.
அதேபோல் தேசியக்கொடியின் மேல் வேறு அலங்காரம் செய்யவதோ, பூக்களை தூவுவதோ கூடாது. தரையினை தொடும் வகையில் தாழ்வாக பறக்க விடக்கூடாது. தலைப்பாகையாகவோ, இடுப்பில் ஆடையாகவோ பயன்படுத்தக்கூடாது. வீடு அல்லது கட்டிடத்தின் மேல் உரிய கம்பில் மட்டுமே பறக்க விட வேண்டும். அவமானம் செய்வது போல் பிற இடங்கள் மற்றும் பிற பகுதிகளில் கட்டக்கூடாது. தேசியக்கொடி பிற கொடிகளுடன் பறக்கும்பொழுது அக்கொடிகளின் உயரத்தை விட தாழ்வாக பறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேசியக்கொடியினை எக்காரணம் கொண்டும் தலைகீழாக கட்டக்கூடாது. குப்பைத்தொட்டியில் எறியக்கூடாது. நமது சட்டையின் இடதுபுறம் மட்டும்தான் குத்திக்கொள்ள வேண்டும். வலதுபுறம் குத்தக்கூடாது. மேசையின் மீது விரிப்பாக விரிக்கக்கூடாது. ஜன்னல்களில் திரைசீலையாக பயன்படுத்தக்கூடாது. கொடியின் மீது நமது கால்படக்கூடாது. கொடியினை கயிறாக பயன்படுத்தக்கூடாது. தேசியக்கொடியினை பயன்படுத்திய பிறகு அழகான முறையில் மடித்து பத்திரமாக வைக்க வேண்டும். கசக்கியோ, சுருட்டியோ வைக்கக்கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.