முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
‘வானவில் மன்றம்’ என்பது தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக முதல் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி ஆகும். இதற்காக ஆர்வமும் செயல்திறனும் மிக்க கருத்தாளர்கள் இந்தத் திட்டத்தை பள்ளிகளில் செயல்முறையில் மாணவர்களுக்கு விளக்கிட பள்ளிக்கு வருவார்கள். தேவையான கருவிகளையும் அவர்களே கொண்டு வருவார்கள். இதையடுத்து பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளைச் செய்து காட்டி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவுவார்கள்.
6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு வகுப்பறைகளுக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்பான அறிவியல், கணிதப் பரிசோதனைகளைச் செய்வதற்கு குறைந்த விலையில் பொருள்களை வாங்க, ஒரு பள்ளிக்கு முதல் கட்டமாக ரூ.1,200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாரந்தோறும் பாடத்துடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ற பொருள்களை குறைந்த விலையில் வாங்கி, பல்வேறு சோதனைகளைச் செய்து காட்ட வேண்டும். பின்னர் மாணவர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். ‘ஸ்டெம்’ (அறிவியல்), தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் குறித்து கருத்தாளர்கள் பள்ளிக்கு வரும்போது ஆசிரியர்கள் அவர்களுடன் இணைந்து பரிசோதனைகளைச் செய்து காட்டவும் மற்றும் வானவில் மன்றத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும்.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…