April 30, 2025

ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நூதன போராட்டம்

சென்னை: தமிழக அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பொது சுகாதாரத்துறை பணி நேரம் தொழிலாளர் விதிகளுக்கு புறம்பான வகையில் நீடிக்கும் விதமாக வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு ஊக்கத் தொகை உயர்வுக்கு தனி அரசாணை வெளியிட வேண்டும். மருத்துவர்கள் சேமநல நிதி திட்டத்தில் அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் முயற்சியால் 11 ஆயிரம் மருத்துவர்கள் சேர்ந்த பிறகும் பயனாளிகளுக்கு சேம நலநிதி உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.எச், டி.எம்.எஸ், டி.எம்.இ. நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் அனைத்து அலுவலக வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து வெளியேறினார்கள். மேலும் அனைத்து தரப்பு அலுவலக சந்திப்புகள், நிகழ்வுகள், முகாம்களில் பங்கேற்காமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் அடுத்த கட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் 4 கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றியபடி நூதன முறையில் போராடி வருகிறார்கள். அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் கோரிக்கை அட்டையை அணிந்துள்ளனர். இந்த கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் 10 நாட்கள் நடக்கிறது. மேலும் வருகிற 25-ந் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.