சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, தி.மு.க. சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய மற்றொரு மனு தாக்கல் ஆனது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ‘அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலனை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும். அவரது இதயத்தில் 3 அடைப்புகள் உள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் இ.எஸ்.ஐ. மருத்துவர்களை வைத்தும் அமலாக்கத்துறை பரிசோதனை செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார். அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. மேலும், கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கைதுக்கான காரணங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டார். அப்போது, அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தைப் பொறுத்தவரை, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பொருந்தாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்பதை அவரிடம் தெரிவித்தோம் சம்மன் அளித்தோம். கைது செய்யப்படுவோம் என தெரிந்தே அதற்கான குறிப்பாணையைப் பெற அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார். கைது குறித்து அவரது மனைவிக்கும், சகோதரிக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளது. கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே எந்தவித இடைக்கால நிவாரணமும் அளிக்கக்கூடாது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது. நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அவர் ஜாமினில் தான் வெளியில் வர முடியும்; அதை நிராகரிக்க கோர முடியாது. விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சரிவர ஒத்துழைக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை வரை நன்றாகத்தான் இருந்தார். ஆனால், திடீரென உடல்நலக்குறைவு என்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் தொடர்பாக தமிழக அரசு அளித்திருக்கும் மருத்துவர் அறிக்கையை நம்ப முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்கலாம். அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டார். பிறகு இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்று ஒத்தி வைத்தார். காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். அதன்படி முதலில் நீதிமன்ற காவல் தொடர்பான மனு மீது விசாரணை நடந்தது. அந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, “நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக” உத்தரவிட்டார்.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…