December 6, 2024

அதிகாரிகளின் ஊக்கப்படுத்தாமல் மக்களை உற்சாகப்படுத்துவதற்கு!— மு.க.ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும்!!

கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக கழகம் ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் ஆன பிறகும் ஆட்சி மட்டுமே மாறி இருக்கிறது. பல இடங்களில் கடந்த கால காட்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபோட்டு கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க அதிகாரிகளை நம்பியே ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்கின்ற நிலை தொடர்கிறது. குறிப்பாக காவல்துறை திமுகவினர்கள் தலையீடு இருக்க கூடாது என்று முதல்வரே பகிரங்கமாக அறிவித்து விட்டதினால் திமுகவின் முக்கிய பிரமுகர்களும், அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் காவல்துறை பிரச்சனை என்றாலே கழக உடன் பிறப்புகளுக்கு உதவி செய்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை கையில் எடுத்து அவர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கைகளையும் காவல்துறை அறங்கேற்றி வருகிறது. இதனால் தோழமை கட்சிகளும் ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை கண்டு வியப்படைகின்றது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சேலம் மாவட்டத்தில் கட்சியின் கொடியை ஏற்றுவதற்கு காவல்துறையே தடையாக இருந்து கொடியேற்ற விடாமல் தடுத்து திருமாவளவனை அனுப்பி வைத்துள்ளது. ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு எதிராக முற்றிலும் முழக்கம் போராட்டம் ஏற்பட்டது. காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொல்.திருமாவளவனை அழைத்து சமாதானம்படுத்தி காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை பணியிடம் மாற்றம் செய்துள்ளார். அதேபோல் கடலூர் தொகுதி நாடாளுமன்ற விஷயத்திலும் கொலை நடந்தப் பிறகும் ஆளுங்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்தவித குரலையும் எழுப்பவில்லை அடக்கியே வாசித்தார்கள். அது மட்டுமல்ல எதிர்கட்சி அரசியல் செய்யவேண்டிய அதிமுகவும் அதன் மாவட்ட செயலாளர்களும் கூட எந்தவிதமான எதிர்வினை ஆற்றாமல் பெயரளவிற்கு அறிக்கை மட்டும் வெளியிட்டு அமைதியாகி விட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி ஆளுங்கட்சியின் மீது ஆளுங்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் விலகி இருக்க வேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனை நன்கு புரிந்துக் கொண்ட அதிகார வர்க்கம் நாம் முதலமைச்சருக்கு மட்டும் கட்டுப்பட்டால் போதும் மற்ற எவருக்கும் கட்டுப்பட வேண்டிய என்ற நிலைக்கு நிர்வாகத்தை வழிநடத்தி செல்கிறார்கள். ஒரு புதிய அரசு பதவிக்கு வந்து தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு சென்று கொண்டிருக்கிறது. நிர்வாக வசதிக்காக பணியாளர்கள் இடமாற்றம் என்பது முழுமையாக நிறைவடையாமல் பரிந்துரைக்கப்பட்ட நிலையிலேயே பட்டியல் காத்திருக்கிறது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் தங்கள் உத்தரவுகள் மூலம் அமைச்சர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள். இதனால் அதிகாரிகளின் கை ஓங்கியிருக்கிறது. குறிப்பிட்ட துறைகளை தவிர மற்ற துறைகளிலெல்லாம் கோப்புகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது கோட்டை வட்டார அதிகாரிகள் மத்தியில் வார்த்தை விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல சில அமைச்சர்கள் தங்கள் விருப்பம் போல் உதவியாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் வைத்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள் இன்னும் உதவியாளர்கள் நியமனத்தில் முழுமையாக நியமிக்காமலேயே வைத்து கொண்டிருக்கிறார்கள்.

மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தோழமை கட்சி தலைவர்களை கூட மதிப்பு கொடுத்து அவர்களிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார். காரணம் அமைச்சரின் உடன் பிறந்த சகோதரின் ஆதிக்கம் அந்த துறை நிர்வாகத்தை முழுவதும் அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அமைச்சரை பார்க்க தினசரி ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களும், ஒப்பந்ததாரர்களும் அமைச்சரின் வீட்டு வாசலில் காத்து கிடக்கிறார்கள். அவர்களிடம் பேசுவதற்கே அமைச்சர் தரப்புக்கு நேரம் போதவில்லை என்பதால் கழகத்தினர் அமைச்சரின் வீட்டில் மணி கணக்கில் காத்துகிடக்க வேண்டிய ஏற்பட்டிருக்கிறது.

இதனால் கடந்த கால ஆட்சி பு0 வருடமாக செயல்பட்டு வந்த ஒப்பந்த தாரர்களும், நிர்வாக அதிகாரிகளும், பணக்கார சப்ளையர்களும் தொடர்ந்து இந்த ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துகிறார்கள். இது ‘ஒருபானை சோற்று ஒரு சோறு பதம்‘ என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வேகமாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு குழுக்களை நியமித்து ஆய்வறிக்கையை தயாரித்து தருமாறு கேட்டு வருகிறார். புதிய ஆளுநர் நியமனம் அவரது செயல்பாடுகளும், ஆளுங்கட்சி தரப்பிற்கு அச்சத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளுநர் குறித்த விமர்சனங்களை தோழமை கட்சி நிர்வாகிகளை வைத்து அறிக்கை வெளியிடுகின்ற அளவிற்கு ஆளுநருக்கு எதிரான செயல்களில் ஆளுங்கட்சி தரப்பு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாமல் மாநில நலன் உரிமை என்று கூறிக்கொண்டு சமாதானம் முறையிலேயே இருந்து வருகிறது. இதுவும் அதிகார வர்க்கத்திற்கு சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது. கழக உடன் பிறப்புகள் கடந்த பு0 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை இழந்து இரவு பகல் பாராமல் கடுமையான உழைத்து ஆட்சியை கொண்டு வந்த பிறகும் தங்கள் நிலை மாறவில்லையே என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

முறையாக எதிர்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக உள்கட்சி பிரச்சனையில் சிக்கிக் கொண்டு கடந்த கால தவறுகளில் சட்ட நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளாகும் என்று எண்ணி எதிர்ப்பு அரசியலை முற்றிலும் கைவிட்டு உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் எதிர்பார்ப்பும் கட்சியினர் விருப்பமும் நிறைவேற்றுவதில் ஒருவித தேக்கநிலையே நிலவி கொண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பெற்றோர் விலை முதல் கட்டுமான பொருட்களின் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அபாய கட்டயத்திற்கு மேலே சென்று கொண்டிருக்கிறது. சந்தடி சாக்கில் இந்த விலையேற்றம் பல தொழில்களை கடுமையான பாதித்து வருகிறது. குறிப்பாக பணக்கார தொழில்களை தவிர ஏழை எளிய மக்களின் தொழில்கள் நலிவடைந்து வருகிறது என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக இல்லை என்பது பொதுமக்களின் பார்வைக்கு தெரிகின்ற அளவில் மாநில அரசாங்கம் இணக்கமான சூழலை கடைப்பிடித்து வருகிறது.

அதே நேரம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பொது வழியில் தெரிவித்து ஆளுங்கட்சி அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஆட்சிக்கும் அதிகார வர்க்கத்திற்கும் பொதுமக்களுக்கும், நெருங்கிய தொடர்பும் உறவும் ஏற்படாமல் மிகப் பெரிய அளவில் இடைவெளி ஏற்பட்டு ஆட்சிக்கு எதிரான மனோநிலையில் மக்கள் மனதில் குடியேறிவிடும். ஆகவே அதிகார வர்க்கத்தை மக்கள் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டிய தருணம் இது தான்.

– டெல்லிகுருஜி