October 11, 2024

அதானியை பின்னுக்கு தள்ளிவிட்டு முகேஷ் அம்பானி மீண்டும் ஆசிய பணக்காரர்களில் முதலிடம்

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24-ந் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 மோடி டாலர்களை (சுமார் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலர்களுடன் (சுமார் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-வது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலர்கள் (சுமார் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி அந்த இடத்தை இழந்தார். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.