November 5, 2024

10 லட்சம் பேருக்கு இந்த மாத இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் 5 லட்சத்து 52 ஆயிரத்து 754 பேர். இந்த எண்ணிக்கை இந்த ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் என்ற இலக்கை தொட இருக்கிறது.

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் முன் கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிறுவனத்தில் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் 5 லட்சத்து 52 ஆயிரத்து 754 பேர். இந்த எண்ணிக்கை இந்த ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் என்ற இலக்கை தொட இருக்கிறது.

இதனை செயல்படுத்த வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இது 600 இடங்களில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியானது ஒரு இயக்கமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தடுப்பு முகாம்களிலும் 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருகிற சனிக் கிழமை 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.