March 28, 2026

மத்திய அரசிடம் நிதியை பெறுவதற்கு திட்டங்கள் மூலமே நிதியை பெறமுடியும்
கடிதம் எழுதினால் நிதி கிடைக்காது
திமுகவுக்கு பதிலடி
நடிகர் விஜய்யும் ஊழல்வாதி தான்

  • எடப்பாடி பழனிசாமி

‘’தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு, ஹால்டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடியால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலூரில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது கூட தெரியாமல் 171 பேர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இப்படி நிர்வாகத் திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளது.
இன்னும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை. யுபிஎஸ்சி தேர்வு செய்து அனுப்பிய பட்டியலில் மாநில அரசு உரிய காலத்தில் டிஜிபியை நியமிக்காமல் இருந்தால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் கூட ஒருவரை நிரந்தர டிஜிபியாக நியமிக்கவில்லை. அந்தளவுக்கு திறமையற்ற அரசு”என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கேள்வி : தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு ஊழல் காரணமா? அல்லது டிஎன்பிஎஸ்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமா?

இபிஎஸ் : டிஎன்பிஎஸ்சியின் நிர்வாகத் திறமையற்ற செயல் தான் காரணம். ஏற்கனவே உதவி ஆய்வாளர் தேர்வு இப்படித்தான் குளறுபடி ஏற்பட்டது. உயர் காவல்துறை அதிகாரி அறை தீக்கிரையாக ஆக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். அந்த உயர் அதிகாரி டிஜிபியிடம் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கேள்வி : யார் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்?
இபிஎஸ் : அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி : திராவிட மாடல் 2.0க்கு ஜீரோதான் கிடைக்கும் என்று சொன்னீர்கள். அதற்கு நேற்று திமுக இளைஞரணி மாநாட்டில் என்.டி.ஏ.வுக்கு ஜீரோவை பரிசளிக்கப்போவதாக பேசியிருக்கிறார்களே?
இபிஎஸ் : ஆட்சி இப்படியே நடந்தால் கண்டிப்பாக ஜீரோ தான் கிடைக்கும். அவர் சொல்கிறார், மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். மாநில அரசுக்குத் தேவையான திட்டங்களைத் தான் கொடுக்க முடியும். அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை பெற்றோம். இந்த அரசு முறையாக அணுகாத காரணத்தால் கைநழுவிப் போகிறது. இதற்குக் காரணம் ஸ்டாலின் அரசுதான். மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். அப்போதெல்லாம் எவ்வளவு நிதி, திட்டங்களை பெற்றனர்? மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது?
ப.சிதம்பரம் அவர்கள் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோதுகூட தேவையான திட்டங்களைப் பெறமுடியவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில், அம்மா அரசு இருக்கும்போது சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுமார் 63 ஆயிரம் கோடி மதிப்பில் 112 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்க உள்துறை அமைச்சரே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அப்போதே கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்து சரியான முறையில் திட்ட அறிக்கை தயாரிக்காமல் அவசர கோலத்தில் அனுப்பியதால் மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இதெல்லாம் அரசின் அலட்சியம், திறமையில்லாத அரசு என்பதற்கு இதெல்லாம் எடுத்துக்காட்டு.

கேள்வி : இன்னும் பாஜக தான் உங்களை இயக்குகிறது, எடப்பாடி பழனிசாமி இல்லை என்.டி.ஏ பழனிசாமி என்று முதல்வர் சொல்லி இருக்கிறாரே?
இபிஎஸ் : என்ன நீங்களும் வேடிக்கையாகக் கேட்குறீங்க..? நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கூட்டணியில் இருந்தோமா? மூச்சுக்கு முன்னூறு முறை இந்தியா கூட்டணி என்று பேசிவிட்டு இன்று வாயைத் திறக்க மறுக்கிறாரே முதல்வர், அதைக் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள். காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் பூசல் வந்துவிட்டது. கருத்துவேறுபாடுகள் வருகிறது. விரிசல் ஏற்பட்டது உண்மைதானே. இன்றுவரை வெளிப்படையாகப் பேசவில்லையே?

கேள்வி : என்.டி.ஏ கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்கிறாரே?
இபிஎஸ் : பொருந்திய கூட்டணியா இல்லையா என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும், ஸ்டாலின் முடிவு செய்யக்கூடாது. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வருகிறபோது வெற்றி பெற அமைக்கப்படுவதுதான் கூட்டணி. அதிமுகவுடன் யார் யாரெல்லாம் கூட்டணியில் இருந்தார்களோ அவர்களே தான் திமுகவுடன் இருக்கிறார்கள். திமுக கூட்டணியில் தேர்தல் நேரத்தில் எந்தெந்தக் கட்சியெல்லாம் இடம் பெற்றிருந்ததோ அந்தக் கட்சியெல்லாம் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. இது காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது இயல்பு.

கேள்வி : காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி செல்ல விரும்புகிறார்கள். 1996ல் ஏற்பட்ட பிளவு போல மீண்டும் காங்கிரஸில் பிளவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?
இபிஎஸ் : நடப்பதைப் பார்க்கும்போது அப்படித்தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் சொல்லும் கருத்துக்கு, திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் பதிலைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. அண்மையில் கனிமொழி டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியும் தீர்வு காணவில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சி குழு அமைத்தும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லையே?

கேள்வி : இப்படி இருந்தும் நாங்கள் 200 தொகுதிகள் ஜெயிப்போம் என்று சொல்கிறார்களே?
இபிஎஸ் : தேர்தல் முடிந்தால் உண்மை தெரியும். அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

கேள்வி : அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சி வரும் என்று சொன்னீர்களே?
இபிஎஸ் : சில கட்சிகள் வரும் என்று சொன்னோம். பாமக, அமமுக வந்துவிட்டது, இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். வாய்ப்பிருக்கிறது.

கேள்வி : ஜாக்டோ-ஜியோ நடத்தும் முதல்வருக்கான பாராட்டு விழா அழைப்பிதழில் ஜெயலலிதா மற்றும் உங்களது ஆட்சியை மட்டும் குறை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு உள்ளுக்குள் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இபிஎஸ் : ஸ்டாலின் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் என்ன இருக்கிறது? அவர்கள் கேட்ட கோரிக்கை என்ன? பங்களிப்பு இல்லாத ஓய்வூதிய திட்டம் தான் கேட்டனர். ஸ்டாலின் பங்களிப்பு உள்ள ஓய்வூதிய திட்டத்தைத் தானே அறிவித்திருக்கிறார். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லையே. ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து அறிவித்துள்ளனர். குழந்தை அழுதால் மிட்டாய் கொடுத்து சரிசெய்வது போல, அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்ததும் அவர்களை ஏமாற்றி சரிசெய்துள்ளனர். அதற்கு சில சங்கங்கள் துணை போயிருக்கிறது.

கேள்வி : திமுக தேர்தல் அறிக்கை தான் எப்போதுமே கதாநாயகன் என்பார்கள். இப்போது நீங்கள் இரண்டு கட்டமாக அறிவித்திருக்கிறீர்கள், திமுகவில் ஏதும் ஸ்லீப்பர் செல் வைத்திருக்கிறீர்களா?

இபிஎஸ் : ஸ்லீப்பர் செல்லா? ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள தனித்தன்மை இது. மக்களுக்கு என்ன அறிவிப்பு கொடுத்தால் நன்மை பயக்கும் என்று சிந்தித்து இரண்டு கட்டங்களாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறோம்.

கேள்வி : பிரதமர் மோடி வருவதற்கு முன்பாக மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வந்துவிடுமா?
இபிஎஸ் : பேசிக்கொண்டு இருக்கிறோம், இன்னும் தேர்தல் அறிவிப்பு வரவில்லை. தேர்தல் அறிவித்தால் தானே கூட்டணி முழுமை பெறும்.

கேள்வி : தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறீர்கள், ஆனால் அதிமுக சார்பில் எந்த ஒரு போராட்டமும் முன்னெடுக்கவில்லையே?
இபிஎஸ் : நாங்கள் தான் போராட்டத்தை அறிவித்திருக்கிறோமே. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறோம். மாநகராட்சி, நகராட்சிகளில் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் தான் போராட்டம் நடத்துகிறோம்.

கேள்வி : திமுக தொடர்ந்து மாநாடுகளை நடத்திக்கொண்டு இருக்கிறதே?
இபிஎஸ் : வேறு வழியில்லையே, தினமும் ஒரு அறிவிப்பு கொடுக்கிறார்கள். எந்தப் பெயராவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு ஸ்டாலினுக்குக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். தினம் ஒரு பெயர், போட்டோ ஷூட் அதோடு முடிந்துபோய்விட்டது.

கேள்வி : செய்தியாளர் கரூரில் தாக்கப்பட்டிருக்கிறார். அதுகுறித்தப் புகாரில் செய்தியாளர் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளனரே?
இபிஎஸ் : அதான் ஸ்டாலின் அரசாங்கம். அதற்குத் தான் நீங்கள் துணை நிற்கிறீர்கள். திமுக போன்ற மோசமான கட்சிக்குத் துணை நிற்பதால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. அதை முதலில் நீங்கள் உணருங்கள். நான் நான்காண்டுகள் 2 மாதங்கள் முதல்வராக இருந்தபோதும் சரி, இப்போது 5 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி என்னைப் பற்றியும், அதிமுக பற்றியும் தான் விமர்சனம் செய்கிறீர்களே தவிர, திமுகவைப் பற்றி விமர்சிப்பதே இல்லை.
திமுகவில் நடக்கும் ஊழல் பற்றி ஒரு விவாதம் வைக்கிறீர்களா? இப்படி நீங்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பதால் தான் சர்வாதிகாரி போல நடந்துகொள்கிறார்கள். யாரையும் மதிப்பது கிடையாது. நிருபர்களைத் தாக்குவதால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என நினைத்திருந்தால் தாக்கியிருக்க மாட்டார்கள். நிருபர்கள் தான் மக்களுக்கு நடுநிலையோடு செய்திகளை கொண்டு சேர்க்கிறீர்கள். அதைக்கூட அவர்கள் மதிக்கவில்லையே, இதற்குக் காரணத்தை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

கேள்வி : பிப்ரவரி 17ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறதே?
இபிஎஸ் : இடைக்கால பட்ஜெட் தான் இது. இதில் எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆட்சியின் கடைசி ஆண்டில் ஒவ்வொரு அரசும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும். இதில் அரசு ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்டவை தான் இடம்பெறும்.

கேள்வி : விஜய் ஊழலுக்கு எதிராகப் பேசுகிறார், ஆனால் அவரே 1.5 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறாரே?
இபிஎஸ் : நீங்களே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிவிட்டீர்கள். அதனால் விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவர் பணம் கட்டாமல் இருப்பதே சாட்சி. நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. எங்கு வெளியில் வந்திருக்கிறார்,.? கட்சி தொடங்கினார் அவ்வளவுதான். மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்துவிட்டது, 72 நாட்கள் வீட்டை விட்டே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்தால் அதை துணிந்து நின்று தீர்வுகாண்பது தான் ஒரு அரசியல் கட்சித் தலைவருடைய பண்பாக இருக்க வேண்டும். ஆனால், துயரம் ஏற்பட்டதும் வெளியிலே வரவில்லை, அலுவலகத்தை மூடிவிட்டனர். கட்சி இருக்கிறதா இல்லையா என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

கேள்வி : தமிழ்நாட்டுக்கு நிதி வேண்டும் என்று முதல்வர் தொடர்ச்சியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறாரே?

இபிஎஸ் : 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரே கட்சி திமுக தான். என்ன திட்டம், எவ்வளவு நிதி கொண்டுவந்தார்கள்? நாங்கள் நடந்தாய் வாழி காவிரி திட்டம் 14 ஆயிரம் கோடியில் கொண்டுவந்திருக்கிறோம். அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவித்தது, தமிழ்நாடு அரசு மறுக்கிறது.
இந்தாண்டு கூட நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் 990 கோடி ரூபாய் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டிருப்பதாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிடப்பில் போட்டுவிட்டனர். இதற்குக் காரணம் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக நிறுத்திவிட்டனர்.
14 ஆயிரம் கோடி மத்திய அரசு கொடுத்ததுதானே, ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த திட்டமும் வரவில்லை என்று சொல்வதற்கு என்ன காரணம்? 63 ஆயிரம் கோடி தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி கொடுத்தார்கள். துறைமுகம், நெடுஞ்சாலைத்துறைக்கு நிறைய நிதி கொடுத்துள்ளனர். ரயில்வே திட்டம் நிறைய கொடுத்தனர். இவர்கள் சரியாக நிலம் எடுத்துக் கொடுக்காத காரணத்தினால் சில திட்டங்கள் முடங்கி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் 10 நெடுஞ்சாலைகளுக்கு நாங்கள் அனுமதி வாங்கினோம், அது அப்படியே 5 ஆண்டுகள் கிடப்பில் கிடக்கிறது. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு மத்திய அரசைக் குறை சொல்வதுதான் முதல்வரின் நிலைமை.

கேள்வி : நேர்காணல் முடித்துவிட்டீர்கள் எந்த அடிப்படையில் வேட்பாளர் தேர்வு இருக்கும்?
இபிஎஸ் : அதை எப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியும்? அதிமுகவைப் பொறுத்தவரை உழைக்கின்றவர்களுக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்.

கேள்வி : என்.டி.ஏ வந்தால் மீண்டும் இந்தி வந்துவிடும் என்கிறாரே முதல்வர்?
இபிஎஸ் : இந்தியை முதலில் கொண்டுவந்தது காங்கிரஸ், அப்போது கூட்டணியில் இருந்தது திமுக. இப்போது யாருடன் கூட்டணியில் உள்ளனர், காங்கிரஸ். இவர்கள் பேசலாமா? யோக்கியம் இருக்கிறதா? காலத்துக்கு ஏற்றவாறு நடிக்கும் கட்சி திமுக.

கேள்வி : திமுக தேர்தல் வாக்குறுதிகளை எவ்வளவு நிறைவேற்றி இருக்கிறது?
இபிஎஸ் : நான்கில் ஒரு பாகம் கூட நிறைவேற்றவில்லை. முக்கியமான திட்டம் எதுவும் நிறைவேற்றவில்லை.

கேள்வி : மற்ற கட்சிகளைப் போல தேர்தல் ஆயத்த மாநாடுகளை அதிமுக நடத்துமா?
இபிஎஸ் : எங்கள் கட்சியில் அப்படியெல்லாம் இல்லை. தேர்தல் வந்துவிட்டது. இன்னும் ஒரு மாதம் தானே. 185 சட்டமன்றத் தொகுதிகளில் எழுச்சிப் பயணத்தை முடித்துவிட்டேன். வருகிற 15ம் தேதி பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் எழுச்சிப் பயணத்தைத் தொடங்க இருக்கிறேன். அதன்பின் சென்னை புறநகர் பகுதி, திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எழுச்சிப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். அதிமுக தான் முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

கேள்வி : அதிமுக ஒரு கட்சியே அல்ல என்று செங்கோட்டையன் சொல்லி இருக்கிறாரே?
இபிஎஸ் : செல்லாத நோட்டுக்கு பயன் இருக்கிறதா? அதுபோல அவரைப் பற்றி பேசி என்ன பயன்? செல்லாத நோட்டுக்கு என்ன வேலியூவோ அதேதான் அவருக்கும்.

கேள்வி : ஜெயலலிதா இருந்தபோது பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார், நீங்கள் எப்படி?
இபிஎஸ்: நாங்களும் கொடுப்போம். யாரை நிறுத்தினால் வெற்றி என்றும், எந்தத் தொகுதியில் பெண் வேட்பாளர்கள் வலிமையாக இருக்கிறார்கள் என்றும் பார்த்து, அந்தத் தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்துவதற்கு அதிமுக முன்னோடியாக இருக்கும்.