January 18, 2025

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அதிரடி வியூகம்: கமல்ஹாசன் சூறாவளி சுற்றுப்பயணம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அவர் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், கூட்டணி தொடர்பாக விரிவாக விவாதித்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்பு மக்கள் மத்தியில் கட்சியின் செயல்பாடுகளை எடுத்துக் கூறும் வகையில் இந்த கூட்டம் அமையும் என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பொதுக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசுகிறார். இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் சூறாவளி சுற்றுப்பயணத்திலும் அவர் ஈடுபட உள்ளார். அதற்கு முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்டம் வாரியாக சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் மற்றும் முரளி அப்பாஸ், கவிஞர் சினேகன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று உள்ளனர். இது போன்ற ஆலோசனை கூட்டங்கள் முடிந்த பின்னர் கமல்ஹாசனின் மாவட்டம் வாரியான சுற்றுப்பயணம் தொடங்குகிறது.