July 15, 2025

திருப்போரூரில் 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் பல பகுதிகளில் நிறைவேற்றப்படவில்லை. இதனால், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், திருப்போரூர் அரசு மருத்துவமனையில், மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் எக்ஸ்ரே மிஷின் சரியாக செயல்படுவதில்லை. பழைய மாமல்லபுரம் சாலை-கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் திருப்போரூர்-நெம்மேலி சாலை ஒருவழி சாலையாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இங்கு நான்குவழிச் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் 150 ஆண்டுகால பழமையான கட்டிடத்தில் செயல்படுகிறது. அங்கு போதுமான இடவசதி இல்லை. இப்படியான, மக்களின் அடிப்படை தேவைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டி அதிமுக சார்பில் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.