2026 சட்டமன்ற தேர்தல் எந்த திசையை நோக்கி செல்லப் போகிறது என்ற கேள்வி எழுகிறது? ஒரு திசையில் தமிழர் என்ற குரல் ஒலிக்கும். இன்னொரு திசையில் திராவிடம் என்ற சொல் எதிரொலிக்கும். மூன்றாவது திசையில் ஆரியம் என்ற குரல் ஒலிக்கும். இப்படி மூன்று விதமான குரல்கள் தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் அதிதீவிரமாக எதிரொலிக்கும் சூழல் உருவாக்கும். இந்த சூழலில் யாருக்கு அதிக சேதாரம் ஏற்படப் போகிறது என்பதை உற்று நோக்கினால் தமிழர்களுக்கும், இந்துதுவா வாதிகளுக்கும் மிகப் பெரும் அளவில் சேதாரம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
திராவிடம் என்ற சொல்லாடல் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக தமிழக அரசியலை தன்வசப்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இன்றளவும் ஆட்சியில் இருந்து வருகிறது. ‘கல்தோன்றி மண்தோன்றி முன்தோன்றிய தமிழ்’ இன்றளவும் திராவிட சொல்லாடலுக்குள் அகப்பட்டுக் கொண்டு விடுபடுவதற்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
போராட்டம் என்றால் தமிழர்கள் முன்னிலை வகிப்பதும், பதவி என்றால் தமிழர்கள் பின்நோக்கி செல்வதும் இன்றளவும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆட்சி என்றால் முன்னிலை வகிப்பதும், மொழி என்றால் முன்னிலைப் படுத்துவதும். மதத்தை காட்டி அச்சிறுத்துவதும், ஆட்சி கட்டிலில் தொடர்ந்து அமர வேண்டும் என்று விரும்புவதும், திராவிட இயக்கங்கள் மட்டுமே என்பதை இன்று வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி மண்ணின் மைந்தர்கள் ஆட்சி எப்பொழுதும் மலரும் என்ற கனவு இன்றளவும் ‘கானல் நீராகிப்’ போனது.
திராவிடருக்கும், திராவிடத்திற்கு ‘சாமரம்‘ வீசுவதே தமிழர்களின் நிலையாகிப் போனது. தட்டிக் கேட்க வேண்டிய தமிழர்கள் விட்டுக் கொடுத்து வாழும் நிலைக்கு தாழ்ந்துப் போனது ஏன்? என்ற கேள்விக்கு இன்றுவரை விடை தெரியாமல் ஐந்து தலைமுறையிடம் பதிலை தேடிக் கொண்டு அலைகிறார்கள். இடையில் இந்துதுவா என்ற புலியைக் காட்டி மதவெறி ஆட்சியாளர்களின் பெயரை சொல்லி தமிழர்களை அடக்கி ஆளும் திராவிட சொல்லாடல் ஆந்திராவில், கேரளாவில், கர்நாடகாவில், தெலுங்கானாவில் ஏற்றுக் கொள்ளப்படுவதே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் என்ற சொல்லை தவிர்த்து பேசினால் பெரும் குற்றமாகவே கருதப்படுவதும், எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் ஒரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
உலக தமிழர்கள் முதல் தமிழ்நாட்டு தமிழர்கள் வரை தமிழ், தமிழ், தமிழ், தமிழர், தமிழர், தமிழர் என்று எப்பொழுது உரக்க குரல் எழுப்பப் போகிறார்கள். உதடுகள் இணையும் பொழுதெல்லாம் உச்சரிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ஒவ்வொரு தமிழர்கள் இதயங்களிலிருந்தும், எப்பொழுது எழப்போகிறது என்ற ஏக்கமும், தாக்கமும் தமிழர் குடிகளில் ஒலிக்கும் நாள் என்றைக்கு வரப்போகின்றது என்ற கேள்வியை இளைய தலைமுறையினரும் இணைய தலைமுறையினரும் இணைந்து செயல்பட்டால் இதற்கான மாற்றத்தையும் தமிழின் ஏற்றத்தையும், தமிழர்களின் உயர்வையும் தமிழர் கையில் ஆட்சி அதிகாரம் என்பதையும், விரைந்து கொண்டு வர இயலும் என்பதை காலம் விரைந்து முடிவு செய்யும்.
இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு தமிழன் நலம் காக்கும் நல்லாட்சி அமைந்திட தமிழர்கள் சொல் பேச்சு கேட்கும் நாள் என்று வருமோ அன்று முதல் தமிழர்களுக்கு பொற்காலம். விடியும் வரை காத்திருப்போம். விடிந்த பின் விழித்திருப்போம். நம்பிக்கை வளரட்டும் நம் கைகள் உயரட்டும். தீமைகள் அகலட்டும் திராவிடம் வழி விடட்டும்.
– பெருந்தமிழன்
More Stories
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்