நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசியலில் போடும் கணக்கு தமிழ்தேசிய சிந்தனையாளர்களை கவர்ந்து இழுக்குமே தவிர தேர்தல் அரசியல் வெற்றிக்கு ஒருபோதும் உதவாது. குறிப்பாக தனித்து போட்டியிட்ட சீமானின் உரத்த குரல் தமிழக இளைஞர்களையும், தமிழ்தேசிய பக்கம் சாய்ந்திருக்கும் வாக்காளர்களையும், கடந்த காலங்களில் ஈர்த்து வந்தாலும் தனித்துப்போட்டி என்பதும் சாதிவாரியான முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளர்களை நிறுத்துவது என்பதும் குடத்தில் தெரியும் விளக்காக அமையுமே தவிர வெற்றிக்கு உதவாது. நிச்சயமாக தோல்வியை உறுதிப்படுத்தும் என்பது உறுதி.
ஒரு நல்ல அரசியல்வாதி என்பவர் தன்னைநம்பி அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை எவ்வாறு வழிநடத்த வேண்டுமென்று திட்டமிடலில் சீமான் அவர்கள் சரியான பாதையில் சென்று வெற்றியை ஈட்டுவதற்கு முயற்சி செய்யாமல் தனித்து போட்டி என்ற குரலை உரக்க ஒலித்துக்கொண்டிருப்பதினால் ஒரு தொகுதியில் கூட வெற்றிக்கனி என்பது எட்டாக்கனியாகவே சென்றுவிடும். சாதி, மதம், மொழி, இனம் இவைகளை கடந்து நாம் தமிழர் என்ற கோஷம் தற்போதைய காலகட்டத்தில் தமிழக அரசியலில் எந்தவகையிலும் கதைக்கு உதவாது என்பது அரசியல் அறிந்தவர்கள் கற்றுக்கொண்ட பாடம்.
தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை சிறுபான்மை மொழிபேசுபவர்களின் ஆதிக்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நீடித்து நிலைத்து வந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தெலுங்கர்கள் எண்ணிக்கையும் அரசியல் ஆதிக்கமும் தமிழர்களை ஒதுக்கிவைத்து சிறுபான்மையினர்களையும் மைனாரிட்டி சமுதாயத்தை சார்ந்தவர்களையும், வாழவைத்து கொண்டிருக்கிறது என்றே சொல்லமுடியும். இன்றைக்கு சீமான் அவர்கள் எழுப்புகின்ற தமிழ்தேசிய அரசியல், திராவிடமாடல் அரசியலில் சிக்கிதவித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
இதனால் திராவிடம் பேசுபவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு பெருன்பான்மை தமிழர்களையும், பெரும்பான்மை சமுதாய மக்களையும் தங்கள்வயப்படுத்திக் கொண்டு அரசியலில் பல வெற்றிகளை சுவைத்து அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக திராவிடமுன்னேற்ற கழகம் இந்த பாதையில் மாபெரும் வெற்றியை ஈட்டியதோடு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் செயல்பாடுகளும் அரசியல் வழிகாட்டுதலும் தனக்குப்பின் தனது மகன் மு.க.ஸ்டாலின், மு.க.ஸ்டாலினுக்கு பின் உதயநிதிஸ்டாலின் என்ற அடிப்படையில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை சுற்றியே தமிழக அரசியலின் நிலைப்பாடு அமையவேண்டும் என்ற சித்தாந்தத்தையும் வழிகாட்டுதலையும் முன்னெடுத்து சென்றுள்ளார்.
ஆகவே, திராவிடர்கழகம் திராவிடமுன்னேற்ற கழகம் இப்பொழுது திராவிடமாடல் என்ற பரிணாமவளர்ச்சியில் முன்னிலை வகித்துவருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமானின் அரசியல் தமிழ்தேசியம், தமிழர் விடுதலை, தமிழர்களை ஒருங்கிணைப்பது தனித்துப்போட்டியிடுவது என்ற அரசியல் தமிழ்நாட்டின் எந்தவகையில் எடுப்படும் என்பதை புரிந்துக்கொள்ள இயலவில்லை. ஒருபுறம் திமுகவையும், திமுக அரசையும் எதிர்த்து பேசுவதும், அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பேசுவதும் இன்னொருபுறம் புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களை வரவேற்று பேசாமல் அவரது செயல்களை கண்டித்துபேசுவதும் கடுமையாக விமர்சனம் செய்வதும் எந்தவகையில் ஏற்புடைய அரசியல் என்பது புரியாத புதிராக இருந்துவருகிறது.
கடந்தகாலங்களில் அரசியல் களத்தில் தேர்தல் அறிவுப்புகளுக்கு முன்பே வேட்பாளர்களை அறிவிப்பதும், அனைத்து சமுதாய மக்கள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதும் தொடர்ந்து தோல்வியை சந்திப்பதும் சுமார் 8 சதவிகித வாக்குகளைப் பெற்று மூன்றாம்இடம் என்று கூறிக்கொண்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்போட்டியிடுவதால் திராவிடகட்சிகள் வெற்றிக்கு ஏதோ ஒருவகையில் சீமான் காரணமாக இருந்துவருகிறார். தேர்தல் அரசியலில் வெற்றி தோல்விகள் ஏற்புடையது என்றாலும் ஒருஅரசியல் இயக்கம் எந்தவித சாதனையும், அடையாமல் இயக்கம் நடத்திக்கொண்டிருப்பது எதற்காக என்ற கேள்வியும் எழுகிறது.
பஞ்சமிநிலமீட்பு, பட்டியல் சமுதாயமக்கள் வெளியேற்றம் என இருசமூகங்களின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி திராவிடகட்சிகளுக்கு சவால் விடுவதும், பொதுதொகுதிகளில் பட்டியலின வேட்பாளர்களை நிறுத்துவதும் சிறுபான்மை சமூகங்களான முஸ்லீம் சமுதாய மக்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவதிலும், எத்தகைய வெற்றியை சீமான் மீட்டமுடியும் என்பதையும் இலங்கை தமிழர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில் எத்தகைய முன்னேற்றத்தை சீமான் அடைந்துள்ளார் என்பதையும், கணக்கிட்டுபார்த்தால் சீமான் அரசியல் எதற்காக இப்படி அமைந்துள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.
சீமான் தான்கொண்ட கொள்கையில் உறுதியாகவும், மக்கள்முன் எடுத்துவைக்கும் கோரிக்கைகள் நியாயமானதாகவும், உண்மையானதாகவும் இருக்கலாம். ஆனால் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளும், முடிவுகளும் பலரது வெற்றிதோல்விகளை தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால் சீமான் அவர்களின் வெற்றியையும் தோல்வியையும் அவர் ஏற்றுக்கொள்ளலாம் அதே நேரம் அவரது ஆதரவாளர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அரசியல் தோல்விகளை ஏற்றுக்கொள்வார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக அமைகிறது. குடத்தில் இட்ட விளக்கு எரிந்து கொண்டிருக்கலாம் ஆனால் வெளிச்சம் இருட்டை விளக்காது அப்படிதான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் செயல்களும் அதிரடி நடவடிக்கையில் இருந்துவருகிறது.
– டெல்லிகுருஜி

More Stories
தேவர் ஜெயந்தி திருப்பம் தருமா..?
விஜய் தனித்துப்போட்டி தோல்வி நிச்சயம் உறுதி..! திமுக – அதிமுக ஆதாயம் யாருக்கு?
உத்திரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திருந்த வேண்டும்!
கி. வெங்கட்ராமன் பொதுச் செயலாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்