திபெத்: புத்த மதத் தலைவரான தலாய்லாமா தனக்கு பிறகு புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் விஷயத்தில் சீனாவுக்கு அதிகாரம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும், மரபுப்படியே புதிய தலாய் லாமா தேர்வு இருக்கும் என்றும் கடன் போட்ராங் அறக்கட்டளையே தலாய் லாமாவை தேர்வு செய்யும் என்றார். அதேநேரம் கடன் போட்ராங் அறக்கட்டளையைச் சீனாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அதென்ன கடன் போட்ராங் அறக்கட்டளை.. இதன் தலைவர் யார்.. இதன் பின்னணி என்ன.. சீனாவுக்கு இது ஏன் பிடிக்காது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
புத்த மதத் தலைவரும், திபெத்திய ஆன்மீகத் தலைவருமான தலாய் லாமா வரும் ஜூலை 6ம் தேதி தனது 90-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இவரை உலகெங்கும் உள்ள புத்தர்கள் 14-வது தலாய் லாமாவாக கருதுகிறார்கள்.. தலாய் லாமாக்களின் மரணத்திற்குப் பிறகு, புதிய தலாய் லாமாக்கள் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை சுமார் 600 ஆண்டுகளாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
அதேநேரம் இந்த முறை புதிய தலாய் லாமாக்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சீனா தலையிடக்கூடும் என்ற கருத்துப் பரவலாக நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தலாய்லாமா தேர்வு குறித்து சீனா அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகளே ஆகும். தற்போதைய சூழலில், தலாய்லாமா இந்த விவகாரம் குறித்து சில முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதாவது தனது மறைவுக்குப் பின்னரும் 600 ஆண்டு பழமையான இந்த அமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றும், தனது அடுத்த மறுபிறப்பைக் கடன் போட்ராங் அறக்கட்டளையே தேர்ந்தெடுக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், 15-வது தலாய்லாமாவை நியமிக்கும் அதிகாரம் சீனாவுக்கு ஒருபோதும் போகாது என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திபெத்திய புத்த மதத்தின் முக்கியமான பிரிவுகளில் ஒன்றான கெலுக் பிரிவின் தலைவராக தலாய்லாமா கருதப்படுகிறார். இவர் ஆன்மீக வழிகாட்டியாக மட்டுமல்லாமல், திபெத்திய கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறார். இதனால் சீனாவுக்கு எதிராக இவரது கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் சீனாவுக்கு இந்தக் கடன் போட்ராங் அறக்கட்டளையே சுத்தமாகப் பிடிக்காது. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். இந்த அறக்கட்டளை குறித்து நாம் பார்க்கலாம்.
கடன் போட்ராங் அறக்கட்டளை என்பது தலாய் லாமாவால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அறக்கட்டளை தர்மசாலாவில் அமைந்துள்ளது.. 14வது தலாய் லாமாவின் எதிர்கால மறுபிறப்பை அங்கீகரிக்கும் பொறுப்பு இந்த அமைப்பிற்கே இருக்கிறது. மேலும் திபெத்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதும், திபெத்திய சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் இந்த அறக்கட்டளை பொறுப்பாகும்.
1642ஆம் ஆண்டில் 5வது தலாய் லாமாவால் நிறுவப்பட்ட திபெத்திய அமைப்பான வரலாற்றுச் சிறப்புமிக்க கடன் போட்ராங்கின் பெயரே இந்த அறக்கட்டளைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடன் போட்ராங் என்பது திபெத்தின் லாசாவில் உள்ள ட்ரேபுங் மடாலயத்தில் உள்ள தலாய் லாமா பரம்பரையின் குடியிருப்புப் பகுதியாகும். தலாய்லாமா நிறுவனத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பராமரிப்பதே இந்த அமைப்பின் தலையான கடைமை. கடன் போட்ராங் அறக்கட்டளை தர்மசாலாவில் உள்ள தலாய் லாமாவின் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தலாய்லாமாவே கடன் போட்ராங் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். மூத்த துறவியும், மத்திய திபெத்திய நிர்வாகத்தின் தலைவருமான பேராசிரியர் சாம்டோங் ரின்போச்சே அறக்கட்டளையின் செயல்முறைகளைக் கவனித்து வருகிறார். தலாய் லாமாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான ரின்போச்சே, அறக்கட்டளையின் மேலாளராகவும் மற்றொரு தலைவராகவும் செயல்படுகிறார். கடன் போட்ராங் அறக்கட்டளையின் மற்ற உறுப்பினர்கள் தர்மசாலாவில் உள்ள தலாய் லாமாவின் அலுவலகத்தில் அவருக்கு உதவியாளர்களாக உள்ளனர். அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களும் இந்தியாவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. மெக்லியோட்கஞ்சில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய சாம்டோங் ரின்போச்சே, “காலம் வரும்போது,அவர் (தலாய்லாமா) மறுபிறவி எடுப்பார்,
மேலும் எந்தவொரு வயது வந்தவர் அல்லது எந்தப் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் அவரது மறுபிறவியாக அங்கீகரிக்கப்படலாம்” என்றார். மேலும், அடுத்த தலாய்லாமா திபெத்திலிருந்து வர வேண்டிய அவசியமில்லை என்பதையும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார். சீனாவின் நிலைப்பாடு திபெத்தை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகச் சீனா கருதுகிறது. மேலும் கடன் போட்ராங் அறக்கட்டளையின் அதிகாரத்தை ஏற்கவில்லை. மறுபிறப்பு செயல்முறை சீன உள்நாட்டுச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று பெய்ஜிங் வலியுறுத்துகிறது. இந்தச் சட்டங்களில் ‘பொன் பானை’ செயல்முறை மற்றும் 2007 ஆம் ஆண்டின் மாநில மத விவகாரப் பணியகத்தின் ஆணை எண். 5 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி சீன மத்திய அரசால் புதிய தலாய்லாமாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஆகியவை அடங்கும். கடன் போட்ராங் அறக்கட்டளை தலாய் லாமா அவர்களின் மறுபிறப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான அமைப்பாகும். இது திபெத்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதிலும், திபெத்திய சமூகத்திற்கு ஆதரவளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- தொகு
More Stories
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..!
அரசு வேலைவாய்ப்புகளில் பீஹாரில்
பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு
முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
திருப்போரூரில் 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு