சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அளவில் சரிவை தந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையையும், ராகுல்காந்தியின் செயல்பாடுகளையும் கேள்விகுறியாக்கி உள்ளது. 61 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களிலேயே காங்கிரஸ் வெற்றிப்பெற முடிந்தது. இதனால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிலைமை படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 2026&ல் சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் என்பதும், ஒரு கேள்விக்குறியாகி மாறியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள பட்டியல் இனத்தை சார்ந்த கார்க்கே அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுவதற்கு காரணமாகி உள்ளது என்று வடமாநில தலைவர்கள் கருதுகிறார்கள். அதே போன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருப்பவர் கே.சி.வேணுகோபால் கேரளமாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரண்டு நபர்களும் தென்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.
இளம் தலைவர் என்-று போற்றப்படும் ராகுல்காந்தியும் பிரியங்காகாந்தியும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தால் கூட்டங்கள் கூடுகிறதே தவிர, இளைஞர்களையும், பொதுவாக்காளர்களையும் கவரக்கூடிய தலைவர்களாக இல்லை என்பது பீகார் தேர்தல் முடிவுகள் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. இதே நேரம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சச்சின்பைலட் தீவிர பிரச்சாரத்தினால் ஆளுங்கட்சியான பாஜக கட்சியை எதிர்த்து இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையும், பீகார் தேர்தலுக்கு எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் அமைதிகாப்பது எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டாலும் அது படுதோல்வியைதான் சந்திக்க நேரிடும் என்று வடநாட்டு காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக ராகுல்காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்து நாடா-ளுமன்ற தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தப் பிறகு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதுபோன்று தற்போதைய தலைவர் கார்க்கே அவர்கள் தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்து இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியவர்களுக்கு நம்பிக்கைகுரியவரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக்கேலட் அவர்கள் பீகார் மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும், காங்கிரஸ் கட்சி இத்தகைய படுதோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அசோக்கேலட் எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்பொழுது கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிமோதல் ஆரம்பமாகியுள்ளது. முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். இரண்டரை ஆண்டுகள் கடந்தப் பிறகு துணைமுதல்வரான டி.கே.சிவக்குமார் முதல்வராக பதவியேற்பார் என்று கொடுத்த வாக்குறுதியை ராகுல்காந்தியும், சோனியாகாந்தியும் நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் டில்லியில் முகாமிட்டு அகில இந்திய தலைமையை நெருக்கடி தருகிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் செல்வப்பெருந்தகைக்கு எதிராக பலர் அகிலஇந்திய தலைமைக்கு புகார்அளித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அகிலஇந்தியகாங்கிரஸ் கட்சியின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமான நிலையில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்பதுடன் பொருளாதார நிலைமையும் சீர்செய்ய முடியாமல் தவித்துவருவதுடன், பல்வேறு மாநிலங்களில் தனித்தன்மையை இழந்து கூட்டணி கட்சிகளான மாநில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை கர்நாடக மாநிலம், தெலுங்கானா மாநிலம் இரண்டிலும் ஆட்சியில் இருந்தாலும் அடுத்து வரக்கூடிய தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் நாளுக்குநாள் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை மெல்ல மெல்ல இழந்து வருவதுதான் என்பதை உணர்ந்துக்கொண்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மாற்று கட்சியை நோக்கி செல்வதற்கு நாள்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அகிலஇந்திய அளவில் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்வதுடன் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்வதிலும் சிலுவையை சுமப்பதிலும் அர்த்தமில்லை. அதேபோல் பட்டியலின வாக்காளர்களும் முஸ்லீம் மக்களின் வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு வருவதற்கான வாய்ப்பும் மிகமிக குறைவு என்பதை மனதில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்களை கவரக்கூடிய ஒரு தலைமையை அகிலஇந்திய காங்கிரஸ் கட்சி தேர்வு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டால் எதிர்கால அரசியலில் பாஜக கட்சியை எதிர்த்து அரசியல் செய்வதற்கும், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கும் வாய்ப்புகள் உருவாகும் என்பதை ராகுல்காந்தி அவர்களும் பிரியங்காகாந்தி அவர்களும் ஆலோசனை செய்து நல்லமுடிவை எடுத்தால் காலம் கடந்தாலும் கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
உடனடியாக காங்கிரஸ்கட்சி மாநிலகட்சிகளுடன் கூட்டணி கட்சிகளின் உறவை முறித்துக்கொண்டு வெளியேறி தங்கள் கட்சியை வளர்ப்பதற்கு புதிய திட்டத்தை தயார்செய்து அந்தந்த மாநிலங்களின் கட்சியை வளர்க்கவேண்டும். கூட்டணி என்பது தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே என்ற அடிப்படையில் கூட்டணி அமைத்து தேர்தல் முடிந்தவுடன் கூட்டணியை விட்டு வெளியேறி மாநிலத்தில் இழந்த செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமே தவிர நிரந்தரமாக ஒரு கட்சியுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்ககூடாது என்கிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள்.
மத்தியபிரதேசத்தில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா பாஜக கட்சி இணைந்து மத்திய அமைச்சராக ஆகியது போல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சச்சின்பைலட் வாய்ப்பை பயன்படுத்தி கட்சி மாறி இருந்தால் ராஜஸ்தான் மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சி தன்செல்வாக்கை முழுவதும் இழந்து நிற்கும். நல்லவேளை அவர் விலகாதது ஆளுங்கட்சியான பாஜக கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். இடைத்தேர்தல் வெற்றி இதை உறுதிப்படுத்துகிறது.
– டெல்லிகுருஜி

More Stories
சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம்
பீகார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்காந்தியின் கருத்து
4 மாநில பா.ஜனதா தலைவர்கள் மாற்றம்- ஜே.பி.நட்டா அதிரடி