December 26, 2024

அமைச்சராகிறார் உதயநிதி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் மருத்துவ பரிசோதனை விஷயமாக வெளிநாடு செல்வதாக திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி கோட்டை வட்டாரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சரவையில் முக்கிய இலக்காவிற்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர் முதல் கழகத்தின் உதயநிதி ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பல அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் தகுதியை பெற்றுவிட்டார் என்று தங்கள் சுற்றுப்பயணம் செல்லும்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட சுற்றுப்பயணத்தின் பொழுது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் அவர் அமைச்சர் ஆனால் நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுவார். மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்வார். அதற்கான தகுதியும் திறமையும் வந்துவிட்டது என்று பேட்டியளித்துள்ளார்.

அவரை தொடர்ந்து பேசிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வெகு விரைவில் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி பல அமைச்சர்கள் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று வழிமொழிந்து கொண்டிருக்கிறார்கள். எதற்கும் தை பிறந்தாள் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இன்னும் 30 நாட்களில் தை மாதம் வரவிருப்பதினால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்படலாம். இதற்கு ஏற்றாற்போல் தலைமை செயலகத்தில் அவருக்கு அறை தயாராகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டால் முதல்வரின் இலாக்காக்களில் முக்கியமான இலாக்காகளிலும் கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின் வகித்து வந்த இலாக்காகளிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த உள்ளாட்சித்துறை இலாக்காக்களும் உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார் என்று ஆருடம் கூறுகிறார்கள். “அல்லாமல் குறையாது நெருப்பில்லாமல் புகையாது” என்பதை போன்று இந்த செய்தி கோட்டை வட்டாரத்தில் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது. கூடவே சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்படலாம் சில அமைச்சர்களை கட்சிப் பணிக்கு கழற்றிவிடப்படலாம் என்ற செய்தியும் உலாவருகிறது.

– டெல்லிகுருஜி