January 27, 2023

மகள் இயக்கத்தில் ரஜினி.. வெளியான அறிவிப்பு..

2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் ‘ஓ சாத்தி சால்’ என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், இவர் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். லால் சலாம் இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் முதல் முறையாக ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.