சென்னை: சென்னையில் ஏற்கனவே கடல்நீரை குடிநீராக்கும் 2 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இதற்கிடையே நெம்மேலியில் 10.5 ஏக்கர் பரப்பளவில் தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலையின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் 60 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. இங்கு குழாய்களை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. கடலுக்குள் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு 2,250 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட குழாய்களை பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழாய் கடலுக்குள் 10 மீட்டர் ஆழம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. 47.35 கி.மீ தூரத்தில் 41 கி.மீ தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணியை குடிநீர் வாரியம் முடித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் பேருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து குடிநீர் வினியோகம் தொடங்கும். இந்த நிலையில் நெம்மேலி அருகே உள்ள பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் 4-வது ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெம்மேலியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலை அமைகிறது. இந்த ஆலையின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக்கப்படும். இதற்கான திட்ட மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி ஆகும்.
200 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் 2 பிரிவாக இந்த ஆலை அமைக்கப்படுகிறது. பராமரிப்பு காலத்தில் கூட இந்த ஆலையில் இருந்து குறைந்தபட்சம் 200 மில்லியன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். ஆலை அரிப்பு மேலாண்மை திட்டம், உப்பு நீரை கடலில் பாதுகாப்பாக வெளியேற்றுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த ஆலை அமைக்கப்படுகிறது. இந்த ஆலையின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் உற்பத்தி விலை லிட்டருக்கு ரூ.32.52 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை, தாம்பரம், சிட்லபாக்கம், செம்பாக்கம், மாங்காடு, வளசரவாக்கம் மற்றும் தொழிற்பேட்டைகளுக்கு தண்ணீர் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 22.67 லட்சம் பேர் பலன் அடைவார்கள். இந்த ஆலையில் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் குடிநீர் உற்பத்தி தொடங்கும்.