January 26, 2025

தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. சமீபத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், தமிழகம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட 22 மாநிலங்களுக்கான மாநில பேரிடர் நிதியாக 7,532 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவிற்கு ரூ.1,420.80 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.712 கோடியும், ஒடிசா மாநிலத்திற்கு ரூ. 707.60 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிதி பேரிடர் காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும்.