September 18, 2024

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்


புதுடெல்லி

அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு சாய்னா நேவால், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கிறேன் என பதிவு செய்திருந்தார்.

சாய்னா நேவாலின் இந்த கருத்திற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெண்களை கொச்சை படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் உங்கள் ட்வீட்டில் பதிவிட்ட, சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் எனது ட்வீட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய நாகரீகமற்ற நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்பதாக நடிகர் சித்தார்த் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவை அல்ல. தங்களது ட்வீட்டுக்கு பதிலாக நான் பதிவிட்ட வார்த்தைகள் அதன் விதத்தை நியாயப்படுத்த முடியாது. என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். எப்போதும் நீங்கள் தான் என் சாம்பியன் என்றும் கூறியுள்ளார்.