September 18, 2024

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செல்லாது- சென்னை ஐகோர்ட்

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் கடந்த மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை ஐகோர்ட்டே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சார்பில் ஐகோர்ட்டு பதிவுத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. மேலும் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியிடமும் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் விசாரித்தார். அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு மீது இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை 10.50 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வந்தார். அவர் வந்ததும் தீர்ப்பில் பிழை திருத்தங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்று கூறி தீர்ப்பை காலை 11.30 மணிக்கு ஒத்திவைத்தார்.

அதன் பிறகு காலை 11.30 மணிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அப்போது, “ஜூன் 23-ந்தேதி, ஜூலை 11-ந்தேதிகளில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும், அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும்” என்றும் உத்தரவிட்டார். நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு என்ன நிலை இருந்ததோ அந்த நிலையே இனி தொடர்ந்து நீடிக்கும். அ.தி.மு.க. சார்பில் ஜூன் 23-ந்தேதி, ஜூலை 11-ந்தேதிகளில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்கள் செல்லாது. ஜூலை 11-ந்தேி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது.

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது. அதே போல் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது. அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது. அ.தி.மு.க. கட்சி விதிகளின்படி அ.தி.மு.க. பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இந்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். புதிதாக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்காக ஒரு ஆணையரை நான் நியமிக்கிறேன். இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் கூறி உள்ளார். சென்னை ஐகோர்ட்டு இன்று வெளியிட்ட தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சட்டரீதியாக முதல் வெற்றியை பெற்றுள்ளனர். இன்று அவர்கள் இந்த வெற்றியை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.