நாடு முழுவதும் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைமுறைக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு இந்தியாவில் வேகமாக பரவி வந்த நிலையில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
கபசுர குடிநீர் அருந்துவது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கைகளை கழுவுவது, கிருமி நாசினி தெளிப்பது போன்ற விழிப்புணர்வு மூலம் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதையொட்டி கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
முதலில் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன் களப் பணியாளர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகள் போடப்பட்டன.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தடுப்பூசி போடுவதற்கு நிறைய பேர் தயக்கம் காட்டிய நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக ஏராளமானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
45 வயதுக்கு மேற்பட்டவர்களில் வேறு நோய்கள் உள்ளவர்கள் இருந்தால் அவர்களும் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதுவரை 6.43 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 30.31 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேக மாக பரவி வருகிறது.
முக கவசம் அணிவது உள்ளிட்ட வழிமுறைகளை மக்கள் மறந்ததே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததற்கான காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட வர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட 1,150 மினி கிளினிக்களில் 700 கிளினிக் உள்பட 5 ஆயிரத்து 117 தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், மாநகராட்சி, நகராட்சி ஆஸ்பத் திரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகியவைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழ்நாட்டில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. 8 லட்சம் டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ள போதிலும் இன்னும் கூடுதலாக தடுப்பூசி மருந்துகளை வரவழைக்க ஏற்பாடுகள் செய்து இருக்கிறோம்.
தமிழகத்துக்கு நாளை கூடுதலாக 10 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 2 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளும் வர உள்ளன.
எனவே பொதுமக்கள் முன்வந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
ஆரம்பத்தில் முன்பதிவு செய்து தடுப்பூசி போடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அப்படி அல்ல. யாரும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு வேகமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 677 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 969 பேருக்கு நேற்று கொரோனா பரவி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக கோவையில் 273 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்தி வருகிறோம். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசு அனுமதித்துள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
More Stories
உலகின் இளம் வயது ஆடிட்டர் நந்தினி அகர்வால் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்:
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலை வியட்நாமுக்கு பரிசளித்த இந்தியா