January 27, 2023

41 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆணை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2022-23-ம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ம.சு. சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன் கலந்து கொண்டனர்.