April 25, 2024

பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த போரிஸ் ஜான்சன் தனுஷ்கோடியை தேர்வு செய்தது ஏன்?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகிற ஏப்ரல் மாதம் ராமேசுவரம், தனுஷ்கோடி வர உள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், குடியரசு தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக இந்தியா வர சம்மதம் தெரிவித்து இருந்தார்.

அந்த நேரத்தில் இங்கிலாந்தில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் அடைந்ததால் அவரது வருகை ரத்தானது.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) போரிஸ் ஜான்சன் இந்தியா வர இருப்பதாகவும், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சீன அதிபர் ஜின் பிங் தமிழகம் வந்து, மோடியுடன் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது போன்று போரிஸ் ஜான்சனுடனான சந்திப்பையும் தமிழகத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொேரானா தாக்கம் குறைவாக உள்ளதும், ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகள் தென்தமிழகத்தில் முக்கிய ஆன்மிக, சுற்றுலா தலங்களாக விளங்குவதும், கடற்கரை பகுதியாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம்.

மேலும் இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் மீது மேற்கத்திய நாட்டினரும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளனர். எனவே ராமாயண நிகழ்வுகளுடன் தொடர்புடைய ராமேசுவரம், தனுஷ்கோடியை காணும் ஆவலில் போரிஸ் ஜான்சன் உள்ளார் என்றும், அதனால் இந்த இடங்களை அவர் தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மோடி, போரிஸ் ஜான்சன் சந்திப்பு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து இங்கிலாந்து நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் ராமேசுவரம் வந்துள்ளார்.

அவர் ராமேசுவரம் கோவில் வாசல் பகுதியில் நின்று பார்வையிட்டதுடன் பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளார். கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனை கடற்கரை பகுதிகளை பார்வையிட்ட அவர், மீண்டும் ராமேசுவரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ரெயிலில் ஏறி உச்சிப்புளி சென்றுள்ளார். இங்கிலாந்து தூதரக அதிகாரி ஆய்வின்போது இந்தியாவின் பாதுகாப்பு பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகிற ஏப்ரல் மாதம் ராமேசுவரம், தனுஷ்கோடி வர உள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. ஆனால் இதுவரையிலும் அது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

அவர், தனுஷ்கோடி வரும் நிகழ்ச்சி உறுதி செய்யப்படும் பட்சத்தில் இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்திறங்கி, மதுரையில் இருந்து மற்றொரு விமானம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை விமான தளத்துக்கு வருவார். அங்கிருந்து கார் மூலமாக அவர் தனுஷ்கோடி அழைத்து வரப்படலாம்.

இங்கிலாந்து சார்பில் கடலில் காற்றாலை அமைக்க இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்திலோ அல்லது தனுஷ்கோடி கடல் பகுதியிலோ இந்த காற்றாலை அமைக்கப்படலாம். இதுகுறித்தும் அதிகாரபூர்வமாக தெரியவில்லை. ஆனால் இங்கிலாந்து தூதரக அதிகாரி தனுஷ்கோடி கடற்கரை பகுதியை பார்வையிட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ராமேசுவரம், தனுஷ்கோடி வருவது உறுதியானால், அதுபற்றிய உறுதியான தகவல் 15 நாட்களுக்கு முன்னர்தான் தெரியவரும்.