April 18, 2024

குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது?- டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி

தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் சென்னை பாரிமுனையில் உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

2022-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை உத்தேசமாக வெளியிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நடைபெறுகின்றன. குரூப்-2 குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும். 5,831 காலி இடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.

இதே போல குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். 5,255 காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்படும்.

அடுத்த ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் மையங்களில் இருந்து விடைத்தாள்கள் கொண்டு செல்வதை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படும்.

அறிவிப்பு வெளியிட்ட 75 நாட்களில் இருந்து தேர் வுகள் நடைபெறும். தேர்வு முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓ.எம்.ஆர். விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரங்களை பார்த்து விடைத்தாள்களை திருத்தி முறைகேடு நடந்துள்ளது. எனவே முறைகேடுகளை தடுக்க ஓ.எம்.ஆர். விடைத்தாள்களில் உள்ள தேர்வரின் விவரங்கள் தேர்வு முடிந்த பின்னர் தனியாக பிரிக்கப்படும்.

தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ் மொழி குறித்த அரசாணையை பின்பற்றி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும். பகுதிஅ-வில் 150 மதிப்பெண்களுக்கு 40 கட்டாயம் பெற வேண்டும். அதற்கு குறைவாக பெற்றால் பகுதி-ஆ தேர்வில் அந்த மதிப்பெண் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. அதனால் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்ற தேர்வில் பகுதிஅ-வில் கட்டாயம் 40-க்கு மேல் மதிப்பெண் பெற வேண்டும்.