திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் விசாகப்பட்டினம் கோவிலிலும் வழக்கம் போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டியுள்ள ரிஷிகேஷ் மலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக ஏழுமலையான் கோவில் கட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆந்திர மாநில அரசு திருப்பதி தேவஸ்தானத்திற்கு விசாகப்பட்டினம் மலையில் 10 ஏக்கர் நிலத்தை மானிய விலையில் வழங்கியது. இதையடுத்து கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் போலவே ரூ.28 கோடி செலவில் பிரமாண்ட அளவில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 கோடி மதிப்பில் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. கடந்த 3 ஆண்டுகளில் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் மேலும் 3 கோடி கூடுதலாக செலவிடப்பட்டு கோவில் கட்டப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவில் முழுவதும் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
கருவறையில் ஒரு அடி உயரத்தில் பீடமும், 7 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன ஏழுமலையான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் போலவே மலைக்குச் செல்ல ஒரு பாதையும், மலையிலிருந்து கீழே வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தனியாக நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
இலவச தரிசனத்திலும் பக்தர்கள் செல்லலாம்.சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் இருந்து கொண்டு செல்லப்படும் லட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் விசாகப்பட்டினம் கோவிலிலும் வழக்கம் போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் 13-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி 9-ந் தேதி அங்குரார்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவிலில் ஏழுமலையானுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயரும், லட்சுமி தேவி, ஆண்டாள் ஆகியோருக்கு தனித் தனியாக கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏற்கனவே விஜயவாடா, டெல்லி, ராமேஸ்வரம், ஜம்முவில் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. விசாகபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரிஷிகேஷ் மலையிலுள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
More Stories
சபரிமலையில் 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!
“ஆன்மீக தொண்டு மூலம் சக்தி ஒளி பரவச் செய்தவர்
‘அம்மா’ பங்காரு அடிகளார்”