October 11, 2024

வரித்தலை வாத்து முதன்முறையாக முட்டுக்காடு ஏரிக்கு வருகை- பறவை ஆர்வலர்கள் நெகிழ்ச்சி

சென்னை: மங்கோலியாவில் அதிக அளவில் வரித்தலை வாத்துக்கள் காணப்படும். தற்போது அங்கு குளிர் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இந்த பறவைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் வலசை பறவைகள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் வரை பல்வேறு நீர் நிலைகளில் தங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் மங்கோலியா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காணப்படும் வரித்தலை வாத்துக்கள் தமிழகத்துக்கு வரத்தொடங்கி உள்ளன. பழவேற்காட்டில் அதிகமாக காணப்படும் வரித்தலை வாத்துக்கள் இப்போது முதன்முறையாக சென்னை அருகே முட்டுக்காடு ஏரியில் இருப்பது பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. இது பறவை ஆர்வலர்களை நெகிழ்ச்சி அடைய செய்து உள்ளது. வெள்ளை கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த பறவைகள் முட்டுக்காட்டில் முகாமிட்டு இருப்பது இதுவே முதல் முறை என்று ‘தி நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் நிர்வாகி திருநாராயணன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- வரித்தலை வாத்துக்களின் இருப்பிடம் மத்திய ஆசியா பகுதி ஆகும். இவை அதிக உயரத்தில் பறக்கும் பறவைகளில் ஒன்றாகும். 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். தற்போது வரித்தலை வாத்து பறவைகள் இமயமலை மற்றும் எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களை கடந்து வந்துள்ளன. பெரும்பாலும் நன்னீர் நிறைந்துள்ள இடங்களிலும், உப்பு நீர் உள்ள கழிமுக பகுதியிலும் உணவை தேடும். இது சுமார் 3 கிலோ வரை எடை இருக்கும். வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த வாத்துக்களின் தலையில் 2 கருப்பு நிற கோடுகளும் காணப்படும். இதனால் இது வரித்தலை வாத்து என்று அழைக்கப்படுகிறது. எப்போதும் இல்லாத வகையில் தற்போது முதன் முதலாக சென்னைக்கு அருகே முட்டுக்காடு கழிமுகப்பகுதியில் வரித்தலை வாத்துக்கள் வந்துள்ளன. இங்கு பறவைகளும் ஏற்ற வகையான சூழல் நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரம் வரித்தலை வாத்துக்கள் வருவது கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.