September 26, 2023

வன்னியர்களின் வாக்குவங்கியை இழக்குமா திமுக?

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சுமார் 13 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி இல்லாத பொழுது திராவிட முன்னேற்ற கழகத்தை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். அதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர்கள் வன்னியர்களே என்று கூறலாம். குறிப்பாக சேலம் வீரபாண்டி ஆறுமுகம், கடலூர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செஞ்சிஇராமச்சந்திரன், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி சின்னசாமி, இப்படி சென்னை ஆர்.எஸ்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் சி.வி.அண்ணாமலை இப்படி பல்வேறு தலைவர்கள் 10 மாவட்டத்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். இந்த ஒன்றுப்பட்ட 10 மாவட்டத்தில் தான் 120-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியும், பதினைந்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதியும் அடங்கியிருந்தது என்று கூறலாம்.

இந்த 10 மாவட்டங்கள் தான் எம்.ஜி.ஆருக்கு எதிராக களத்திலே நின்று திராவிட முன்னேற்ற கழக கட்சிக் கொடியை பட்டி தொட்டியெல்லாம் பறக்க விட்டார்கள். இதை நன்றாக உணர்ந்து இருந்தார் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். 1989-க்கு பிறகு முதல் முறையாக மாவட்டங்களை இரண்டாக பிரித்து புதிய நிர்வாகிகளை நியமிக்க தொடங்கினார் கலைஞர். ஆனால் வன்னியர்களின் வாக்குகளை 60 சதவிதம் அளவிற்கு திராவிட முன்னேற்ற கழகம் கட்டுக்கோப்பாக தன் வசம் வைத்திருந்தது. ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் துரைமுருகன், ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போன்றவர்களை தவிர வேறு ஒரு வன்னிய தலைவர்கள் திமுகவில் பெயர் சொன்னால் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. துரைமுருகனோ அல்லது டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்களோ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வன்னியர்களுக்காக வாதட கூடியவர்கள் அல்ல என்பது உலகறிந்த விஷயம்.

அவர்கள் இருவரும் முழுக்க முழுக்க திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்களாக மட்டுமே செயல்பட கூடியவர்கள். சமுதாயத்தின் பெயரால் இவர்கள் பலன் அடையலாமே தவிர இவர்களால் சமுதாயம் எந்த வகையிலும் பயன்பெற முடியாது. இவர்கள் விருப்பத்தை தற்போதைய தலைமை ஏற்றுக் கொள்ளாது. ஏன் செவிமடுத்து கேட்பதற்கு கூட யோசித்து கொண்டிருக்கும். இதற்கு உதாரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற மேலவை தொகுதிக்கான மூன்று இடங்களில் ஒரு இடத்தைக் கூட வன்னியர்களுக்கு பெற்றுத் தர இவர்களால் இயலவில்லை என்பதே சான்று.

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்த பொழுதெல்லாம் அதிக அளவில் உறுப்பினர்களை வடமாவட்டங்களில் இருந்து மட்டுமே தேர்வு பெற்றார்கள் என்பது வரலாறு. தற்பொழுது கூட சட்டமன்ற உறுப்பினர்களாக அதிக அளவில் வடமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வன்னியர் மாவட்டங்களே அதிக அளவில் வெற்றியை தந்துள்ளது என்றே கூறலாம். அதற்கு சான்றாக தற்பொழுது உள்ள வன்னிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள். தற்பொழுது காலியாக உள்ள மூன்று இடங்களில் ஒரு இடம் திருச்சி சிவா அவர்களுக்கும், இரண்டாவது இடம் அரக்கோணம் என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கும், மூன்றாவது இடம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்வராஜ் அவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்தாண்டு காலத்தில் இனி ஒரு வாய்ப்பு திமுகவுக்கு கிடைக்கப் போவதில்லை. ஆகவே கடந்த ஐந்தாண்டுகளில் திமுகவுக்கு கிடைத்த வாய்ப்புகளை வை-.கோபால்சாமி அவர்களுக்கும், தொழிற்சங்க நிர்வாகி சண்முகம் அவர்களுக்கும், வழக்கறிஞர் வில்சன் அவர்களுக்கும் ஏற்கனவே வழங்கி விட்டார்கள். ஆகவே இந்த 5 ஆண்டுகளில் இனிமேல் வன்னியர்களுக்கு வாய்ப்பு வழங்க திமுகவால் இயலாது என்பது நிஜம். குறிப்பாக இந்த நிலை தொடரும் பொழுது திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வன்னியர்களுக்கு எதிராக செயல்பட கூடியவர்கள் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. மேலே உள்ள மேல்சபை உறுப்பினர்கள் நியமனத்தின் மூலம் அது உண்மையாகவும் விளங்குகிறது. டாக்டர் ராமதாஸ் அவர்களை எதிர்த்து திமுக அணிக்கு வாக்குகளை சேகரிப்பதற்கு எத்தகைய நிலையை மேற்கொள்ள வேண்டும் என்று திமுகவில் உள்ள வன்னியர்கள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள்.

சாதி, மதம், மொழி, இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு அரசியல் கட்சி செயல்படலாம். அதே நேரம் 2021-ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் சட்டமன்ற தேர்தலையும் கணக்கில் எடுத்துக்கொண்டு திமுக தலைமை செயல்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது. பண்ருட்டி வேல்முருகன் பயன்படுத்தி வன்னியர் வாக்குகளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்றதைப் போல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் வன்னியர் வாக்குகளை பெறுவதற்காக வேல்முருகனையும், திமுக பயன்படுத்துமா? என்ற கேள்வியும் எழுகிறது. அதே போல் வீரபாண்டியார் மகன் வீரபாண்டி ராஜா அல்லது வேறு ஒரு வன்னியர் ஒருவருக்கு வாய்ப்பு அளித்து வடமாவட்ட வன்னியர் வாக்குகளை பெறுவதற்கு முயற்சித்திருக்கலாம். அல்லது பண்ருட்டி வேல்முருகனை ராமதாசிற்கு எதிராக களம் இறக்குவதற்கு பயன்படுத்தியிருக்கலாம். இவை அனைத்தையும் தவிர்த்து விட்டு தோழமை கட்சியான காங்கிரஸையும் ஒதுக்கிவிட்டு மூன்று தொகுதிகளையும் திமுக வேட்பாளர்கள் நிறுத்தியிருப்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இதே நிலைதான் வன்னியர் சமுதாய தலைவர்கள் மத்தியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் எழுகிறது. திமுகவின் இந்த செயல்களால் டாக்டர் ராமதாஸ் அவர்களின் கை உயர்வதற்கு வாய்ப்பாகி விட்டது. இந்த சூழ்நிலையை பார்க்கும் பொழுது பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்தையும், வன்னியர் வாக்குகளையும் அலட்சியப்படுத்துகிறதோ அல்லது வன்னியர் வாக்குவங்கியை இழக்கிறதோ திமுக என்று எண்ணத் தோன்றுகிறது.