November 10, 2024

ராஜ்யசபா தேர்தலில்அதிக இடங்களில் மாநில கட்சிகள்வெற்றி பெறும் வாய்ப்பு

[responsivevoice_button voice=”Tamil Male”]மூத்தோர் அவை என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற மேல்சபையில் 245 எம்.பி.க்கள் உள்ளனர். நியமன எம்.பி.க்களை தவிர எஞ்சிய அனைத்து எம்.பி.க்களும் மாநில சட்டசபைகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களால் ஓட்டுப்போட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள். அடுத்த மாதம்(ஏப்ரல்) 51 எம்.பி.க்கள் பதவி முடிகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதால்வே, காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா,திக் விஜய் சிங் ஆகியோர் ஓய்வு பெறும் எம்.பி.க்களில் அடங்குவர்.

மாநிலங்களபையில் ஆளும் பா.ஜ.க.வுக்கு 82 எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46 எம்.பி.க்களும் உள்ளனர். பா.ஜ.க.வை சேர்ந்த 18 பேர் பதவிக்காலம் ஏப்ரலில் முடிகிறது. பல்வேறு சட்டமன்றங்களில் பா.ஜ.க.வின் பலத்தை வைத்து பார்க்கும் போது,அந்த கட்சியின் சார்பில் மீண்டும் 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர் ஓய்வு பெறுகிறார்கள். அந்த கட்சி 10 பேரை மீண்டும் தேர்வு செய்ய முடியும். ஓய்வு பெறும் எம்.பி.க்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 6 பேர். தமிழக சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.தலா 3 எம்.பி.க்களை பெற முடியும். பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் பலம் மேல்சபையில் குறையும் சூழலில், பிராந்திய கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் காலியாகும் 4 இடங்களையும் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றும். மே.வங்க மாநிலத்தில் 5 இடங்கள் காலியாகிறது அதில் 4 இடங்களை ஆளும் கட்சியான திரினாமூல் காங்கிரஸ் கைப்பற்றும். பீகாரில் 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 3 இடங்களிலும்,எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் எம்.பி. பதவியைப் பிடிக்க, திமுக-அ.தி.மு.க கட்சிகளில் ரேஸ் நடைபெறுகிறது.