November 10, 2024

மின்சார பெட்டி அருகில் செல்லக்கூடாது- மழையில் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மழைகாலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது. மழையாலும் பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்கம்பி அருகில் செல்லக்கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பியை தொடாதீர்கள். அவ்வாறு அறுந்து கிடந்தால் அதுபற்றி உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மின்பெட்டி அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்லக்கூடாது. அவ்வாறு தேங்கி இருந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின்போது வெட்டவெளியில் நிற்கக்கூடாது. கான்கிரீட் கட்டிடம், வீடுகளிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடைய வேண்டும். இடி, மின்னலின்போது மரத்தின் அடியிலோ பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ நிற்க வேண்டாம். தஞ்சமடைய எதுவும் இல்லாத நிலையில் மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். இடி, மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்கக்கூடாது. ஸ்டேகம்பி மற்றும் மின் கம்பங்களில் கொடி கயிறு கட்டக்கூடாது. ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் கட்டக்கூடாது.