December 7, 2024

மாவட்ட, ஒன்றியங்களின் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளனர்.

இதையடுத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதே தினத்தில் ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடக்கிறது.

பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் 9 மாவட்டங்களிலும் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றுகிறது.

இந்த பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுகிறது. 2 மாவட்ட செயலாளர்கள் பகுதிகளில் கவுன்சிலர்கள் உள்ளதால் தலைவர் பதவிக்கு ஒரு மாவட்ட செயலாளர் பரிந்துரைத்தால் துணைத் தலைவர் பதவி இன்னொரு மாவட்ட செயலாளர் காட்டும் கவுன்சிலருக்கு வழங்கப்படும்.

அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமரசம் செய்யப்பட்டு வருகிறது. இதே போல் ஒவ்வொரு ஒன்றிய பெருந்தலைவர் பதவியும், துணைத் தலைவர் பதவியும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தேர்ந்தெடுக்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த பதவிகளை பிடிக்க தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக கவுன்சிலர்களிடம் ஆதரவு திரட்டுவது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி படப்பை மனோகரனுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுந்தரின் ஆதரவை எதிர்பார்த்து உள்ளனர். இதில் சமரச தீர்வு ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் செங்கல்பட்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி முன்னாள் எம்.எல்.ஏ. சொக்கலிங்கத்தின் மருமகள் காயத்ரி அன்பு செழியனுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 154 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க. 95 இடங்களிலும், அ.தி.மு.க. 39 இடங்களிலும், பா.ஜ.க. 2, த.மா.கா. 2, ம.தி.மு.க., காங்கிரஸ் தலா 1, விடுதலை சிறுத்தை கட்சி 2, சுயேட்சைகள் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய குழு தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவி தி.மு.க. வசமாகிறது. ஆனாலும் ஒன்றிய குழு தலைவர் பதவியை பெற தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்ற பல தி.மு.க.வினர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசனிடம் தலைவர் பதவி கேட்டு படையெடுத்து வருகிறார்கள். இதில் தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவி போட்டியின்றி தேர்வு செய்ய சமரசம் பேசப்பட்டு வருகிறது.

இதில் ஒன்றியகுழு தலைவர் பதவியை பிடிக்க பரங்கிமலை ஒன்றியத்தில் கடும் போட்டி நிலவுகிறது. பரங்கிமலை ஒன்றிய தலைவர் பதவிக்கு நன்மங்கலத்தைச் சேர்ந்த சங்கீதா பாரதிராஜா பெயர் அடிப்படுகிறது. பாரதிராஜா தென்சென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளராக இருப்பதால் இவரது மனைவிக்கு பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த பதவியை கைப்பற்ற தி.மு.க.வில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற வேல்முருகனின் மனைவி அமுதாவும் முயற்சி செய்து வருகிறார்.

இதே போல் ஒன்றிய கழக செயலாளராக உள்ள மேடவாக்கம் ரவியும், துணைத் தலைவர் பதவியை பிடிக்க ஆதரவு திரட்டி வருகிறார். இவர் 3 முறை மேடவாக்கம் ஊராட்சி தலைவராக இருந்தவர்.

இந்த பதவிக்கு மூவரசம்பட்டு பகுதியில் வெற்றி பெற்ற இளைஞரணி பிரமுகர் பிரசாத் துணைத் தலைவர் பதவியை பிடிக்க ஆதரவு திரட்டி வருகிறார்.

திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. செந்தில் என்ற இதயவர்மன் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணைத் தலைவர் பதவி பையனூர் சேகரின் மனைவி சத்யாவுக்கு கிடைக்கும் என தெரிகிறது.

இதே போல் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் தலைவர், துணைத் தலைவர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர், காணை, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், வானூர், ஒலக்கூர், மேல்மலையனூர், செஞ்சி, மயிலம், திருவெண்ணைநல்லூர், முகையூர், மரக்காணம், வல்லம் ஆகிய 13 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளது.

இவற்றில் வானூர் யூனியனை தவிர 12 பஞ்சாயத்து யூனியனிலும் தி.மு.க. கவுன்சிலர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே 12 யூனியன்களிலும் தலைவர் பதவி, துணைத்தலைவர் பதவியை தி.மு.க.வே கைப்பற்றுகிறது.

வானூர் யூனியனில் தி.மு.க. 10, அ.தி.மு.க. 11, பா.ம.க. 12, வி.சி.க. 2, சுயேட்சை 2 ஆகிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க-அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இதில் 27 வார்டுகளை தி.மு.க கைப்பற்றி உள்ளது. ஒரு வார்டில் மட்டும் அ.தி.மு.க. வென்றுள்ளது.

எனவே மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளை தி.மு.க.வே கைப்பற்றுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாக துருகம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திருநாவலூர் ஆகிய 9 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளது.

இந்த 9 யூனியன்களில் தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்களே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, 9 யூனியன்களிலும் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை தி.மு.க. தனது வசமாக்க உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இதில் அனைத்து வார்டுகளையும் தி.மு.க கூட்டணி கட்சிகளே கைப்பற்றியுள்ளது. எனவே மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் பதவிகளை தி.மு.க.வே கைப்பற்றுகிறது.

நெல்லை மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. சார்பாக 11 உறுப்பினர்களும், காங்கிரஸ் சார்பாக ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன்களில் 7 யூனியன்களில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனால் அங்கு தி.மு.க. கூட்டணி சார்பாக அறிவிக்கப்படுபவர் வெற்றி பெற்று விடுவார்.

நாங்குநேரி யூனியனில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தி.மு.க.வில் சேர்ந்துள்ளதால், அங்கு யூனியன் தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவி தி.மு.க.வுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது.

களக்காடு யூனியனில் மட்டும் மொத்தம் உள்ள 9 வார்டுகளில் தி.மு.க. 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 1 இடத்திலும், காங்கிரசை சேர்ந்த 2 பேர் சுயேட்சையாகவும், மேலும் 2 சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றவர் காங்கிரசை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் முடிவு மாறிவிடும். எனவே இங்கு யூனியன் தலைவர் பதவிக்கும், துணைதலைவர் பதவிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 14 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களில் 10 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 3 இடங்களில் காங்கிரசும், 1 இடத்தில் ம.தி.மு.க.வும் வெற்றி பெற்றது.

தெற்கு மாவட்டம் தரப்பில் இருந்து தமிழ்செல்வி சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கும், வடக்கு மாவட்டம் சார்பில் கடையநல்லூர் பகுதி மாவட்ட கவுன்சிலர் கனிமொழிக்கும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி கேட்கப்படுகிறது.

தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்செல்விக்கு தான் அதிக வாய்ப்புள்ளது. மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பதவியை காங்கிரஸ் கேட்கிறது.

வேலூர் மாவட்ட பஞ்சாயத்து குழுத்தலைவராக அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் பாபு தேர்வு செய்யப்பட உள்ளார். துணைத்தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்கிறது.

அந்த பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் பேர்ணாம்பட்டை சேர்ந்த கிருஷ்ணவேணி மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

வேலூர் ஒன்றிய குழுத் தலைவராக அமுதா ஞானசேகரன் தேர்வு செய்யப்படுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

காட்பாடி ஒன்றியத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி ஆகியோர் ஒன்றியக்குழு தலைவர் பதவி கேட்கின்றனர். இவர்களில் ஒருவர் தலைவராகவும் துணைத் தலைவராகவும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

குடியாத்தம் ஒன்றியக் குழுத் தலைவராக சத்யானந்தம் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவராக ஜெயா முருகேசன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவராக சித்ரா ஜனார்த்தனன் துணை தலைவராக லலிதா டேவிட் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அணைக்கட்டு ஒன்றியத்தில் பாஸ்கரன், மெரினா கோபி, சுதாகரன் உள்பட 4 பேர் போட்டியில் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக ஜெயந்தி திருமூர்த்தி, காந்திமதி பாண்டுரங்கன் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு சேஷா வெங்கட், ராதாகிருஷ்ணன் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவராக அனிதா குப்புசாமி தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. சோளிங்கர் ஒன்றியக்குழு தலைவராக கலைக்குமார் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.

அரக்கோணம், ஆற்காடு, திமிரி, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க.வில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை சூரியகுமார், கவிதா தண்டபாணி, பூங்குளம் முனிவேல் ஆகிய 3 பேர் கேட்பதால் தி.மு.க.வில் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு சத்யா சதீஷ்குமார், உமா கண்ணுரங்கம், பூதேவி சம்பத் இடையே போட்டி உள்ளது. நாட்டரம்பள்ளியில் முரளி, வெண்மணி இடையே போட்டி உள்ளது.

திருப்பத்தூர், ஆலங்காயம், மாதனூர், கந்திலி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க.வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.