September 18, 2024

மறைந்த நடிகர் விவேக் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரிய நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலகங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்களும், பிரபலங்களும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நடிகரும், தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையிலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விவேக், அவரது உடலுக்கான இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.