December 1, 2023

மனிதன் வென்றான் கொரானாவை கொன்றான்!

[responsivevoice_button voice=”Tamil Male”] கொரானா’ என்ற கொடிய நோய் பரவல் உலக நாடுகளை அச்சுறுத்துவதுடன், அன்றாட வாழ்க்கையையே முடக்கி போட்டு, மனித இனத்திற்கு மரண பயத்தை ஏற்படுத்தி இல்லங்களில் முடக்கிப் போட்டு உள்ளது. பல நாடுகள் எண்ணற்ற மனித உயிர்களை ‘கொரானா’வுக்கு பலி கொடுத்து உயிர் வாழ்வதெப்படி என்று போராடிக் கொண்டு வருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழ்மை நிலையில் உள்ள நாடுகள் எல்லா நாடுகளும், தங்கள் பொருளாதாரத்தை இழந்து ஏற்றுமதி இறக்குமதி, போன்ற தொழில்களையும், முற்றிலும் இழந்து நிற்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் உற்பத்தியை முற்றிலும் கடந்த இரண்டு மாதமாக முடக்கிப் போட்டு பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கதியாய் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

பிரதமர் மோடியின் அறிவிப்பும், ஆலோசனைகளும் 130 கோடி மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டவில்லை என்பது நிஜம். மத்திய மாநில அரசுகள் வழங்கி வரும் நிவாரணம், போதுமானதாக இல்லை. மேலும் நிவாரணம் முழுவதும் பல இடங்களுக்கு நேரடியாக போய் சேராமல் உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து தினக் கூலிகளாக வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தியவர்கள் வேலையை உதரித்தள்ளி விட்டு சொந்த ஊர் சென்று உயிர் பிழைத்துக் கொள்ள வேண்டி அரசின் உத்தரவுகளை உதாசீனப்படுத்தும் விதமாக பல இடங்களில் போராட்டம் நடத்துகிறார்கள். சில மாநிலங்கள் ‘கொரானா’ தாக்கத்தை கட்டுப்படுத்த கையாளும் நடவடிக்கைகள் பாராட்டும் படியாகவும், நம்பிக்கை தரும்படியாகவும் இருக்கிறது.

அதே நேரம் டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ‘கொரானா’ தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு படாதபாடுபட வேண்டியுள்ளது. குறிப்பாக நோய் தொற்று தினசரி அதிகரித்துக் கொண்டு வருவதும், அதன் தாக்கம் மூன்றாம் நிலையான சமூக தொற்று அளவில் பரவாமலும் தடுப்பதற்கு போதுமான திட்டங்கள் இருந்தும் திணறுகிறது. இருந்தாலும் சில மாநிலங்கள் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்து ‘கொரானா’வை ஒரு கொட்டுகொட்டி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் கேரளா, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஓடிசா, மிசோரம், அசாம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள், பாராட்டுக்குறியவைகளாக மாறியுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போன்றோர்களுடன் தொடர் ஆலோசனைகள் நடத்தி மாநில அரசு முதல்வர்களுடன் நேரடியாக ‘காணொளி’ காட்சி மூலம் பல்வேறு கருத்துகளை கேட்டறிந்து நாடு முழுவதும் 144 ஊரடங்கை நீட்டித்துக் கொண்டு சுமார் 60 நாட்களாக மக்கள் வீடுகளில் முடக்கிப் போட்டு பாதுகாக்க வேண்டி அறிவுரைகளை கூறினார்.

ஆனால், மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகளை செவிமடுத்து கேட்டுக் கொண்ட பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்வதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குறைப்பாடு உள்ளது. மேலும் முதல்வர்கள் கேட்ட நிதியினை வழங்கவும் மனம் இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதனால் மாநில அரசுகள் போதிய அளவு நிவாரண பணிக்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய இயலாமல் விழி பிதுங்கி அல்லல் படுகிறது. குறிப்பாக பொதுமக்கள் வேண்டுகோளையும் அரசிடம் முன் வைக்கும் கோரிக்கைகளையும் உரிய நேரத்தில் தீர்த்து வைக்க முடியாமல் மாநில அரசு தடுமாறுகிறது. இவ்வளவு நிதி நெருக்கடிக்கு மாநில அரசு தள்ளப்பட்டதற்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு தான் காரணம் என்பது தெரியவருகிறது.

குறிப்பாக தமிழ்நாடு அரசு, தெலுங்கானா, கேரளா மாநில அரசுகள் நிதியின்றி தவிக்கிறது என்பதை தொலைக்காட்சி விவாதங்களில் வரும் தகவல்கள் படம் பிடித்துக் காட்டுகின்றது. உலக அளவில் ‘கொரனா’ தாக்கத்திற்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் என்றாலும், இந்தியாவில் உயிர் பலிகள் எண்ணிக்கை மிக குறைவு என்றாலும், நோய் தாக்கும் அபாயம் நாளுக்கு நாள் கட்டுப்பாட்டை மீறி உயர்ந்துக் கொண்டு போகிறது. இது கவலை தரும் என்பதில் ஆச்சரியம் இல்லை!

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜபபான், ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகள் கூட ‘கொரனா’ தாக்கத்திற்கு மிகப் பெரிய அளவு மனித இழப்புகளை விலையாக தந்துள்ளது. இருந்தாலும் இன்று வரையில் தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்க முடியாமல் திண்டாடுகிறது. விரைவில் தடுப்பு மருந்து ஏதாவது ஒருநாடு கண்டுபிடித்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. எந்த நாடு முதலில் கண்டுப்பிடித்தாலும் அது வரவேற்க தக்கது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

‘கொரானா’ என்ற கொடிய நோய் ஒழிக்கப்பட வேண்டும். மனித இனம் பாதுகாக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் அமைதி திரும்ப வேண்டும். உயிர் பலி என்பது அறவே தடுத்து நிறுத்தப்பட்டு இல்லங்கள் தோறும், மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தோன்ற வேண்டும் ஒவ்வொரு நாடும் பழைய நிலைக்கு திரும்பிட உலக சுகாதார நிறுவனம் உத்தரவாதம் தரவேண்டும். சீனாவின் உகாண்டா மாநிலத்தில் இருந்து வெளியேறிய ‘கொரானா’ உலகம் பரவியது அச்சுறுத்தியது போதும்.

இனி வரும் முன் காப்போம்… வந்த பின் விரட்டியடிப்போம் – என்று உறுதியேற்போம்.

‘கொரானா’ கொல்லப்பட்டது என்ற செய்தியை உலகம் முழுவதும் காதில் கேட்போம். இதில் இந்தியாவின் பங்கு உண்டு என்று முழங்கிடுவோம்! சித்த மருத்துவம்! நாட்டு மருத்துவம், ஹோமியோபதி, உள்பட பாட்டி வைத்தியம் முதல் பரம்பரை வைத்தியம் வரையிலும், ‘கொரானா’வை கொல்லும் ஆயுதமாக மாற்றிக் காட்டுவோம். ஆங்கில மருத்துவம் மட்டும் போதாது என்பதை ‘கொரானா’ உணர்த்தியுள்ளது என்பதை உணர்ந்து செயல்படும் காலம் வந்துள்ளது என்பதை நினைவு கொள்வோம். – டெல்லி குருஜி[/responsivevoice]