November 10, 2024

புதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்

விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும் என புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய விலை கொடுத்து, இஸ்ரேல் மென்பொருளை வாங்கி நமது நாட்டில் பலரின் மொபைல் போன் பேச்சை ஒட்டுக்கேட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் உட்பட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட தகவல் நாட்டை உலுக்கியுள்ளது.

இப்பிரச்சனை பாராளுமன்றத்திலும் வெடித்துள்ளது. நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 6 நாட்கள் பாராளுமன்றம் முடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் கவலை கொள்ளவில்லை.

மத்திய அரசு மென்பொருளை பயன்படுத்தி பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்துள்ளது.

புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு சம்பவத்தில் எனது செல்போன் ஒட்டு கேட்பே காரணம் என சந்தேகப்படுகிறேன். மொபைலில் பேசும் போது எனக்கு சமிக்ஞைகள் தெரிந்தது.

வெளிப்படையான விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும்.

புதுவையில் தற்போது குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

காந்தி வீதி சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த அரசு மக்களைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.