December 7, 2024

பிரதமர் மோடி-எடப்பாடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம்: 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற(தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி தாராபுரத்தில் நாளை 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார்.

பிரதமரின் பிரசார பொதுக்கூட்டத்திற்காக தாராபுரம் உடுமலை செல்லும் சாலையில் மாருதிநகர் அருகே 85 ஏக்கர் நிலப்பரப்பில் பந்தல் மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் மோடி , அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை தாராபுரம் வருகிறார். இதற்காக மேடை அருகேயே மோடி வந்து இறங்குவதற்கு வசதியாக ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. பிரசார கூட்டத்தில் மோடியுடன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். 13 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி தாராபுரம் நகர் முழுவதும் 3 நாட்களுக்கு முன்பே தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது தாராபுரம் கொட்டாப்புளிபாளையம், கொண்டரத்தம்பாளையம், தளவாய்பட்டினம், பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது. சந்தேகப்படும் நபர்களை போலீசார் பிடித்து விசா ரணை நடத்தி அனுப்பி வைக்கின்றனர். அங்குள்ள விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பிரசார கூட்ட மேடை, 80 அடி அகலம், 40 அடி நீளத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கூட்டம் மதிய நேரம் நடப்பதால் வெயிலை தவிர்க்க பு00 அடி அகலம்,700 அடி நீளத்தில் துணி வேய்ந்த 3 மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹெலிபேடு தளத்தில் இருந்து பிரதமர் மேடைக்கு வர வசதியாக 300 மீட்டரில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்கும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொது மக்களுக்கு குடிநீர் கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினருடன் ஐ.ஜி., சுரேஷ், மேற்கு மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஆகியோர் மேற்பார்வையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தாராபுரம் பகுதி யில் முக்கிய இடங்கள், கூட்டம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.