October 11, 2024

பாகிஸ்தான் அனுப்பிய டிரோனை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவ வீரர்கள்

பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாதபடி எல்லையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களையும், போதை பொருட்களையும் இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். எல்லையில் அத்துமீறி நுழையும் டிரோன்களை கண்காணிக்க ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று ஊடுருவியது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து உஷாரானார்கள். அந்த டிரோனை நோக்கி சரமாரியாக சுட்டனர். அந்த டிரோன் பாகிஸ்தானுக்குள் திரும்பி செல்ல முயன்றது. என்றாலும் இந்திய ராணுவ வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள். அமிர்தசரஸ் அருகே ராஜாதல் என்ற இடத்தில் அந்த டிரோன் நொறுங்கி கிடந்தது. அந்த டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.