November 3, 2024

பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன்

[responsivevoice_button voice=”Tamil Male”]தமிழக அரசியலில் வரலாற்று சாணக்கியனுக்கு அடுத்தப்படியாக ‘சாணக்கியர்’ என்ற பெருமையுடன் புகழுடன் அரசியல் வானில் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன். பள்ளிப்படிப்பை முடித்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு (பி.ஈ. ஆனஸ்ட்) முடித்தபின் அரசுப் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே பேரறிஞர் அண்ணா, பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகிய மூன்று முதலமைச்சர்களுடன் பணியாற்றி உள்ளார்.

தமிழக அமைச்சரவையில் சுமார் பதினைந்து, இருபது ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தவர். இவர் வகிக்காத இலாக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு முதல்வர் பொறுப்பினையும் ஏற்று செயல்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் முழு பாராட்டையும் பெற்று, இந்திய அரசின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்று சிறப்புரை ஆற்றிய போது உலகத் தலைவர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்து பாராட்டுகளைப் பெற்றவர். குறிப்பாக, எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை ஐ.நா மன்றத்தில் பதிவு செய்த பெருமை இவரையே சாரும். அதேபோல இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையும், விடுதலைப் புலிகள் போராட்டத்தினையும் ஐ.நா. சபையில் எடுத்துரைத்து உலகத் தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று, இலங்கைப் பிரச்சனைக்கு சுமூகமான ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்று உரக்கக் குரல் எழுப்பியவர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது சிறப்பு விமானத்தை அனுப்பி, பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து வந்து இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது உடன் இருந்து சுமூக தீர்வுக்கு வழிவகுத்தவர்.

இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய மனிதர் தென்னாற்காடு மாவட்டம் பண்ருட்டி வட்டம் புலியூர் கிராமத்தில் பிறந்து, சிறந்த கல்வி கற்று உலகளவில் பேசப்படுகின்ற ஒரு மனிதராக சென்னையில் வசித்து வருகிறார். இன்றும் முழு உடல் நலத்துடன் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கி வருகிறார். எந்த நேரமும் பல தலைவர்களின் நூல்கள் படிப்பதை ஆர்வமாகக் கொண்டுள்ள இவர், உலக அரசியலை அவ்வவ்போது நடைபெறும் செயல்களை உன்னிப்பாக கவனித்து, அலசி ஆராய்ந்து தன் உள்ளங்கையில் வைத்திருக்கிறார்..

தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் சரளமாக உரையாற்றி சிறப்பு பெற்று விளங்குகிறார். காலத்தின் கட்டளையை ஏற்று தனது அரசியல் கடமையை செய்வதில் சற்று விலகி இருந்தாலும், எப்போதும் தீவிர அரசியல் களத்தில் போராடி வெற்றிபெறும் சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகிறார். அரசியலில் இவரது தேவையும், சேவையும் பலருக்குத் தேவைப்படும் அளவுக்கு துல்லியமான கணிப்புகளை கணித்துச் சொல்லக்-கூடிய ஆற்றல் படைத்தவர். தற்போது இவர் சார்ந்துள்ள அதிமுக கழகம், இவரை முழுமையாக பயன்படுத்துகிறதா இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.

அரசியலில் அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் இவர் வெளிப்படுத்தமாட்டார். மீண்டும் எப்போது தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இதுதான் இப்போது உள்ள பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் அவர்களுடைய குறிப்பு.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று உருவானபோது எதிர்காலத்தில் ஜெயலலிதா அணிதான் வெற்றி பெறும் என்று அன்றே கணித்தவர். அதுமட்டும் அல்ல. ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக முன்மொழிந்தவரும் அவரே. ஆனால் பதவி ஆதாயத்தை எம்.ஜி.ஆருக்குப் பிறகு இவர் பெறவில்லை.

மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஏழைக் குடிசை வீடுகளில் மின்சார விளக்கு எரிவதற்கும், உணவு அமைச்சராக இருந்தபோது விலைவாசி ஏறாமல் இருந்ததற்கும் இவரது பெரும் முயற்சியே காரணமாகும்.

இவர் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, ‘கை ரிக்ஷா’வை ஒழிக்கத் திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி, முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பாராட்டைப் பெற்று ‘கைரிக்ஷா’ தொழிலாளர்களின் வாழ்த்துகளை பெற்றவர். இப்படி பண்ருட்டியார் தான் வகித்து வந்த எந்த துறையாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதித்து தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றவர்.

எம்.ஜி.ஆர். இவர் கொண்டு வந்த எந்த திட்டத்தையும் உதாசீனப்படுத்தியதே இல்லை. ஆனால், இவரது அறிவுக் கூர்மையையும் நிர்வாகத் திறமையையும் கண்டு பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஆச்சரியத்துடன் பார்ப்பது உண்டு. உதாரணத்துக்கு, ஒரு கட்டத்தில், தமிழ்நாட்டில் அரிசி விலை வானத்துக்கும் பூமிக்கும் எகிறியது. அந்த நேரம், ஆர்.எம்.வீரப்பன் உணவு அமைச்சர் பதவி வகித்தார். அவரிடம் இருந்த உணவுத்துறையை எம்.ஜி.ஆர் பறித்துவிட்டார்.

அந்த இலாகாவை வகிக்க பலர் முயற்சித்த போது, ஆர்.எம்.வீரப்பன் வசம் இருந்த உணவுத்துறையை பண்ருட்டியாரிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர். உடனே அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வந்துவிட்டது. அது மட்டும் அல்ல. அந்த ஆட்சி காலம் முடியும் வரையில் உணவு பொருட்கள் விலை ஏற்றம் என்பதே இல்லாமல் செய்துவிட்டார் பண்ருட்டியார். எல்லோருக்கும் ஆச்சரியம். விலை ஏற்றத்தை எப்படி சமாளித்தார்?

முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ‘அரிசி விலையைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று?’ அப்பொழுது துறை அமைச்சர் பண்ருட்டியார், தனது கருத்தைக் கூறுகிறார். ஆனால் அதிகாரிகள் அந்தக் கருத்தை ஏற்க மறுக்கிறார்கள். முதல்வர் மௌனமாக அமைச்சர் கூறும் விளக்கத்தையும், அதிகாரிகள் மறுப்பையும் கேட்கிறார்.

இறுதியில், “பண்ருட்டியார் கூறியபடி கேளுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர்.

‘அண்டை மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் உணவு தானியத்திற்கான தடையை உடனடியாக நீக்கினால் (செக்போஸ்ட்) அரிசி விலை குறையும்’ என்பதே அமைச்சர் பண்ருட்டியார் கூறிய ஆலோசனை.

இப்படி பல உதாரணங்கள் கூறலாம். அவர் திறமைக்கு ஒரு உதாரணம் இது.

– மிஸ்டர் மாருதி