[responsivevoice_button voice=”Tamil Male”]கடந்த பல ஆண்டுகாலம் நேரு குடும்ப உறுப்பினர்களால் வழி நடத்தப்பட்டு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை, சுமார் நாற்பது ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை தனது கையில் வைத்திருந்தது. இந்த கால கட்டங்களில் இந்தியா அபார வளர்ச்சிறடைந்தது ஆனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிறிய அளவில் கூட வளர்ச்சியடையவில்லை.
மாநில காங்கிரஸ் தலைவர்களும், மாநில முதல்வர்களும், காங்கிரஸ் தலைமையால் அவ்வப்பொழுது அதாவது நினைத்த பொழு-தெல்லாம் மாற்றம் செய்யப்பட்டார்கள். இதனால் மாநில காங்கிரஸ் கட்சியில் கடும் அதிருப்தி நிலவியது. அதே போல் மாநில காங்கிரஸ் தலைவர்களும் நியமனமுறையில் தேவைப்படும் பொழுதெல்லாம் பந்தாடப்-பட்டார்கள். இந்த நிலைகளை கண்டு பொருமிய காங்கிரஸ் பிரமுகர்கள் இந்திராகாந்தி, இராஜீவ்காந்தி இருந்த வரையில் பொருத்துக் கொண்டார்கள்.
ஆனால் சோனியாகாந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த பொழுது மூத்த காங்கிரஸ் தலைவர்கள் புலம்பத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக கே.என்.சிங், எம்.எல்.பொத்தேதார், ஜெகதீஷ்டைட்லர், இராஜேஸ்பைலட் ஜித்தேந்திர பிரசாத், சீத்தாராம் கேசரி, நரசிம்மராவ் போன்றோர் சோனியா-காந்தியுடன் இணைந்து கட்சி பணியாற்ற விரும்பவில்லை என்றே கூறவேண்டும்.
மாதவராவ் சிந்தியாவும், சோனியாவை எதிர்த்து தனிகட்சியையே தொடங்கினார். அதே போல் சிதரம்பரம், தனியாக பேரவையை தொடங்கி சோனியாகாந்தியை எதிர்த்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். ஏன் மூப்பனார் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து, நிரந்தரமாக சாகும்வரையில் தமிழ்நாட்டில் இருந்து ‘ராஜ்யசபா’ உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கூட விசுவாசம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியை உடைத்து தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தார்.
இப்படி பல்வேறு நிலைகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை பலர் பலகீனப்படுத்தினார்கள். ஒரு சிலர் தனிகட்சி தொடங்கினார்கள். மகராட்ஷராவில் சரத்பவார், மேற்குவங்கத்தில் செல்வி மம்தாபானர்ஜி, தமிழ்நாட்டில் வாழப்பாடி இராமமூர்த்தி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி போன்றோர் இன்றும் தனித்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இயக்கம் நடத்திவருகிறார்கள். நேரு குடும்பம் இல்லாத தலைவர்! காங்கிரஸ் கரைசேருமா?வாழப்பாடி மட்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உரிய மரியாதை வழங்கப்படாமல் இறந்தே விட்டார்.
எம்.பி.சுப்பரமணியம், பலமொழி பேசும் ஆற்றல் திறமை படைத்தவர் இவரை காங்கிரஸ் கட்சி முறையாக பயன்படுத்தாமல் அலட்சியம் செய்தது அவரும் தற்பொழுது இறந்துவிட்டார். மூப்பனாரும் இறந்துவிட்டார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இன்றும் பல தலைவர்கள் தனித்தனியாக கட்சிக்குள் இயங்கி கோஷ்டிகளுக்கு தேர்தல் காலங்களில் ‘சீட்’ பிடித்துக் கொடுத்து, கூட்டணி இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற இயலும் என்று கூறி அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு ஆலோசனைக் கூறிக்கொண்டு, திமுக அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி எப்பொழுது விலகி விட்டாரோ, அப்பொழுதே அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மிகமிக பலகீனமடைந்து விட்டது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் ஈர்ப்புத் தன்மை குறைந்துவருகிறது. மீண்டும் சோனியாகாந்தி தலைவர் என்ற அறிவிப்பு, காங்கிரஸ் பலகீனப்பட்டுள்ள நிலையில், பிரியங்காகாந்தி கட்சி பொறுப்புக்கு வந்தார். அவர் வருகையும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு உதவவில்லை.
இந்த நிலையில் ப.சிதம்பரம் மீது வழக்கு போட்டு திகார் சிறையில் அடைத்தது, அகில இந்திய அளவில் மட்டும் அல்லாமல், உலக அரங்கில் காங்கிரஸ் இமேஜ் மிகப் பெரிய அளவில் பாதிப்பையும், இழப்பையும் ஏற்படுத்தியதுடன், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவு ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. அதே நேரம் பல தொகுதிகளில் டெபாசிட் தொகையை பரிகொடுத்துள்ளது. இந்த வேதனை கலந்த நிலையில் அகில இந்திய தலைமையை கலந்து ஆலோசிக்காமல், ப.சிதம்பரம் ‘ஆம்ஆத்மி’ கட்சியின் வெற்றியையும் முதல்வர் கெஜ்ரிவால் குறித்தும், தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளார்.
இந்த செய்தியை, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மகன்… முகர்ஜி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சிதம்பரத்தையும், அவரது அறிவிப்பினையும் கண்டித்துள்ளார். இவற்றையெல்லாம், கவனித்து வரும் அகில இந்திய தலைமை சோனியாகாந்தி உடல் நலத்தை கருதி மவுனமாக இருந்து வருகின்றார். கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்துகிறார். அதே நேரம் மூத்த தலைவர்களுக்கு எதிராகவோ, அல்லது கட்சியினர் அதிருப்தியாகவோ எந்த கருத்தையும் சோனியாகாந்தி வெளிப்படுத்தாமல் உள்ள நிலையில், கேரள மாநில மூத்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் மற்றும் மறைந்த ஷீலாதிட்சித் மகன் ஆகியோர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை புரணமைப்பு செய்ய வேண்டும் என்றும், நேரு குடும்பம் இல்லாத ஒரு தலைமையை உருவாக்கினால் என்ன என்பது போலவும், தங்கள் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்த செய்தி பலகீனமான காங்கிரஸ் கட்சியை மேலும் பலகீனப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள். ஒரு சில மூத்த காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கர்நாடகாவில் காங்கிரஸ் எடுத்த முடிவும், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மேற்கொண்டுள்ள முடிவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இப்படியே போனால் மாநில கட்சிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உடன்படிக்கை என்ற பெயரில் அகில இந்திய தன்மையை இழந்து மாநில தலைமைகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று ஆதங்கப்படுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிலை மிகவும் பரிதாபமாக போய்க் கொண்டு வருகிறது. இந்த நிலையே தொடர்ந்தால் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, ப்ரியங்காகாந்தி இப்படி ஒருவருக்கும் மதிப்பிருக்காது.
ஆகவே, காங்கிரஸ் தலைமை பதவியும், பிரதமர் பதவியும், நேரு குடும்பத்தைத் தாண்டி மூன்றாவது தலைவர் கட்சிக்கு நியமிக்கப்பட்டால் கட்சியின் சுய கௌரவம் காப்பாற்றப்படும். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படும். கூடவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனி இயக்கம் நடத்தும் தலைவர்களும் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் வந்து இணைவதற்கு வாய்ப்பும் ஏற்படும் என்கிறது மூத்த தலைவர்கள் கூடாரம்.
– டெல்லிகுருஜி
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…