இலங்கையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ‘சிந்து சாஸ்த்ரா’ என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் நிலையில் தென்னிந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இந்திய கடற்படையின் அதிநவீன ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் ‘ஐஎன்எஸ் சிந்து சாஸ்த்ரா’ தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்துள்ளது. இன்னும் பத்து நாட்களுக்கு இக்கப்பல் தூத்துக்குடியில் முகாமிட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இலங்கையில் உள்ள சில துறைமுகங்களை சீனா குத்தகைக்கு எடுத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதோடு, இலங்கையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறுவதுடன் குறிப்பாக தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகும் நிலையுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள சூழ்நிலையில் தமிழகத்தின் தென் பகுதிகளில் துறைமுகம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம், தூத்துக்குடி ஜிர்கோனியம் தொழிற்சாலை, கனநீர் ஆலை, ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தகவல் மையம் போன்ற முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. எனவே, தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி விமானநிலையம் அருகே விமானப்படை விமானம், கடலோர காவல்படை கண்காணிப்பு விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக தனி ரன்வே அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை ராணுவ தளவாடங்களை எளிதாக கொண்டு செல்லும் வகையில் புதிதாக நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ளது.
அவசரகாலங்களில் ராணுவ விமானங்கள் தரையிறங்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் மற்றும் நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன. பராமரிப்புப் பணி மற்றும் எரிபொருள், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு ‘ஐஎன்எஸ் சிந்து சாஸ்த்ரா’ நீர்மூழ்கி கப்பல் வந்துள்ளதாகக் கூறினாலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், இந்த நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடிக்கு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
‘ஐஎன்எஸ் சிந்து சாஸ்த்ரா’ கடற்படையில் உள்ள அதிநவீன ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பலாகும். கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 19ல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இக்கப்பலில் 13 அதிகாரிகள் உள்ளிட்ட 52 கடற்படை வீரர்கள் உள்ளனர். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் உள்ள சிந்துகோஷ் வகையை சேர்ந்த 10வது கப்பலாகும்.
இந்த நீர்மூழ்கி கப்பலில், 300 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்று தரை, வான் மற்றும் கடல் இலக்கை தாக்கும் அதிநவீன குரூஸ் ஏவுணைகள் மற்றும் கையால் தூக்கிச் செல்லும் அளவிலான சிறிய ஏவுணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. இந்த கப்பல் வருகை தொடர்பாக கடற்படை தரப்பிலோ அல்லது துறைமுக தரப்பிலோ எந்தவித அதிகாரபூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
உலகின் இளம் வயது ஆடிட்டர் நந்தினி அகர்வால் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்:
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலை வியட்நாமுக்கு பரிசளித்த இந்தியா