[responsivevoice_button voice=”Tamil Male”]தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் செய்யும் செயல், அவர்களுக்கு எதிராக ‘’பூமராங்’’ போல் சில வேளைகளில் திரும்பி விடும்.
தலைமை செயலாளர் க.சண்முகத்தை சந்தித்து தி.மு.க. எம்.பி.க்கள் மனு கொடுத்த விவகாரம் ’லேட்டஸ்ட்’ உதாரணம். கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ ‘’ஒன்றிணைவோம் வா’’ என்ற பெயரில் தி.மு.க. உருப்படியான காரியங்களை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு லட்சம் மனுக்கள் தி.மு.க.வின் தலைமைக்கு வந்திருந்தன. டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள். இந்த மனுக்களுடன் தலைமை செயலாளர் க.சண்முகத்தை தலைமை செயலகத்தில் சந்தித்துள்ளனர்.
அப்போது அங்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன.
என்ன நடந்தது? கொரோனாவால் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில் 15 பேர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு, தலைமை செயலகம் சென்றுள்ளனர், தி.மு.க. எம்.பி.க்கள்..
அதிர்ந்து போனார், தலைமை செயலாளர். கொரோனா பாதிப்பு தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது, டி.வி.யில் அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அதனை குறிப்பு எடுத்துக்கொண்டிருந்த தலைமை செயலாளர் சண்முகம், தி.மு.க.வினரை வரவேற்று சோபாவில் அமரவைத்து, ’இதன் மீது நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று சொல்லியுள்ளார். அனால் தி.மு.க.வினரோ’’ எத்தனை நாட்களுக்குள் மனுக்களை அதிகாரிகளுக்கு அனுப்புவீர்கள்?’ என்று கேட்டுள்ளனர். ஒரு லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, தலைமை செயலாளரால் உத்தரவாதம் எப்படி அளிக்க முடியும்?.
ஏற்கனவே கொரோனா தடுப்பு வேலைகள். தலைமை செயலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை. இது தி.மு.க.எம்.பி.க்களூக்கு தெரிந்து இருந்தும்,’ எத்தனை நாட்களுக்குள் ,மனுக்களை அனுப்புவீர்கள்?’’ என்று திரும்ப திரும்ப கேட்டு,- உரிய பதில் கிடைக்காத நிலையில் .வெளியே வந்துள்ளனர். அங்கு செயதியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.ஆர்.பாலு ‘’ எங்களை தலைமை செயலாளர் கண்ணியக்குறைவாக நடத்தினார்.’’ என்று சொல்லியுள்ளார். டி.ஆர்.பாலுவின் கருத்து அரசு ஊழியர்களை நோகச்செய்துள்ளது.
கொரோனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த விவகாரம், இப்போது பூதாகரமாய் உருவெடுத்துள்ளது.. இந்த விவகாரத்தில் தமைமை செயலாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் தலைமை செயலாளர் எம்.ஜி.தேவசகாயம். அவர் விடுத்துள்ள அறிக்கையில்’’ ஒரு லட்சம் மனுக்களை தி.மு.க.வினர் கொண்டு சென்றது முதிர்ச்சியான நடவடிக்கை அல்ல.சாதாரண நாட்களில் கூட இதுபோல் யாரும் செய்ய மாட்டார்கள்’’ என்று தி.மு.க.வை காட்டமாகவே விமர்சித்துள்ளார், தேவசகாயம். இந்த விவகாரம், இப்போது தி.மு.க.எம்.பி. தயாநிதி மாறனை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது.
ஏன்? அவர் பேட்டி அளிக்கும் போது’’ தலைமை செயலாளர் சண்முகம் எங்களை தாழ்த்தப்பட்டவர் போல் நடத்தினார்’’ என்று சொல்லியுள்ளார். அதுதான் சிக்கலுக்கு காரணம். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்,பொதுவாக பட்டியலினத்தவரை குறிக்கும். இதனால், அந்த சமூகத்தினர், தி.மு.க.எம்.பி. தயாநிதிக்கு எதிராக ஆர்த்தெழுந்துள்ளனர். அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் தயாநிதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூட தயாநிதி மாறன் கருத்தை ஏற்கவில்லை.. தயாநிதி மாறன் கருத்து இந்த மண்ணின் மைந்தர்களை காயப்படுத்தியுள்ளது’’ என்று அவர் கண்டித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன்’’ தயாநிதி மாறன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று ஆவேசம் காட்டியுள்ளார்.[/responsivevoice]
More Stories
பட்டியல் இனத்தவர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு
தமிழக தொழில் முதலீட்டுக்கு ரூ.1,258 கோடி கிடைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார்
சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை