அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
எனவே தமிழ்நாட்டில் கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.
தற்போது புதிய கட்டுப்பாட்டின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இன்று முதல் அரசின் மறுஉத்தரவு வரும் வரையில் மூடப்படுகின்றன.
உடற்பயிற்சிக்கூடங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகளும் அடைக்கப்படுகின்றன. பெரிய கடைகள், வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை. மளிகை, காய்கறி உள்பட கடைகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்கம்போல் இயங்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.
அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை பரவியபோது வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ-பாஸ்’ நடைமுறை அமலில் இருந்தது. தற்போது புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு ‘இ-பதிவு’ முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகளுக்கும் ‘இ-பதிவு’ கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஊடகம், பத்திரிகை உள்பட அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மறுஉத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
கொரோனா தடுப்பு நடவடிகைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், புதிய கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்