October 11, 2024

டிரோன்கள் மூலம் மருந்து தெளித்ததால் 90 சதவீதம் கொசுக்கள் அழிப்பு – மாநகராட்சி தகவல்

டிரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு மாதத்துக்கு ரூ.22 லட்சம் செலவாகும் என்று சென்னை மாநகராட்சி மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் கொசு தொல்லையை ஒழிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பே கொசுத் தொல்லையை கட்டுக்குள் கொண்டு வர புதிய யுக்தியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஊழியர்கள் செல்ல முடியாத நீர்நிலைகள், நீர் வழிப்பாதைகள், புதர்களில் கொசுக்களை அழிக்க டிரோன் மூலமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டது.

முதலில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் என 140 கிலோ மீட்டர் தூரமுள்ள நீர்வழிப்பாதைகளில் டிரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது. பல பகுதிகளில் தினமும் கொசு மருந்து தெளிக்கப்பட்டன.

இந்த திட்டம் கடந்த ஜூலை 1-ந்தேதி தொடங்கப்பட்ட நிலையில் அதன் பயன்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு வாரத்துக்கு பிறகு டிரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்ட பகுதிகளில் அதற்கு முன்பும், மருந்து தெளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்கு பிறகும் கொசுக்கள் உற்பத்தியாகும் அடர்த்தி குறித்து ஆய்வு செய்தனர்.

இதில் கொசு உற்பத்தியாகும் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கொசு தொல்லை 81 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை குறைந்து இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டை மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

இதுவரை ஊழியர்கள் செல்ல முடியாத பகுதிகளில் டிரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. நீர் நிலைகளின் அனைத்து பகுதிகளிலும் மருந்து தெளிக்கப்படுகிறது.

அதே போல் கொசு மருந்து பயன்பாட்டில் 6 சதவீதம் குறைந்து மிச்சமாகி இருந்தது.

மேலும் கொசு மருந்து தெளிக்கும் பணியின் செலவும் குறைந்துள்ளது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்பட பல்வேறு செலவுகள் குறைகிறது என்றும் அவர்களை வேறு பகுதிகளுக்கு பணிக்கு அனுப்பவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு மாதத்துக்கு ரூ.22 லட்சம் செலவாகும் என்று சென்னை மாநகராட்சி மதிப்பிடப்பட்டுள்ளது.