October 11, 2024

சென்னையில் காற்றில் பறக்கும் கொரோனா விதிமுறைகள்

தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டதை மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜவுளி, நகை கடைகள் ஆகியவற்றுடன் வணிக வளாகங்கள், மால்கள் ஆகியவை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள பெரிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள், மால்கள் ஆகியவை செயல்பட தொடங்கின.

குறிப்பாக தி.நகர் ரங்கநாதன் தெருவில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் கூடி இருந்தனர். இவர்களில் பலர் முகக்கவசம் அணியாமலும் சுற்றினர். முகக்கவசம் அணிந்திருந்த பலர் அதனை காதுகளில் தொங்கவிட்டு இருந்ததை காண முடிந்தது.

இப்படி சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன.

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இதுபோன்ற மக்களின் அலட்சிய போக்கால் அது மீண்டும் அதிகரித்து விடவும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதாக மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்த நிலையில் தான் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் நேற்று கொரோனா விதிமுறைகளை மறந்து அதிகளவில் திரண்டுள்ளனர்.

கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடிக்கிடந்த கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் அங்கே வேலை செய்து வந்த ஊழியர்களும் பணிக்கு திரும்பினர். இதனால் சென்னையில் மக்கள் நடமாட்டமும் பெருமளவு அதிகரித்து இருந்தது.

பஸ், ரெயில்களிலும் அதிகளவு கூட்டம் காணப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கும் அதிகளவில் மக்கள் கூடி இருந்தனர்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி, தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனால் பொது மக்கள் அதனை மறந்து கொரோனாவை பரப்பும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்.

கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவல் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.