[responsivevoice_button voice=”Tamil Male”] பாடலி புத்திரத்தில் மெகஸ்தனீஸ்
மெகஸ்தனீஸ், “எங்கள் நாட்டு டுரோஜன் யுத்தம் போல் இருக்கிறது இதுவும். அங்கே போரிட்டவர்கள் உறவினரில்லை. அவ்வளவு தான் வித்தியாசம். இன்னும் ஒன்று. அந்தச் சண்டையே டிராய் நகரத்தைச் சேர்ந்த ஹெலன் என்பவளைப் பாரீஸ் என்னும் இளவரசன் தூக்கிச் சென்றதனால் ஏற்பட்டது” என்றான்.
“இராமாயணம் என்ற எங்கள் இதிகாசத்திலும் சீதையை இலங்கைக்குத் தூக்கிச் சென்றதால் யுத்தம் நேர்ந்தது” என்றான், சித்தார்த்தகன். “இந்தக் கோட்டை அவ்வளவு பலமானதாகத் தெரியவில்லையே!” என்றான், மெகஸ்தனீஸ்.
“பாரத நாட்டாருக்கு அஆள்கள் முக்கியமேயொழியக் கோட்டையோ, கொத்தளமோ, வேறு கருவிகளோ அவ்வளவு முக்கியமல்ல” என்றான், சித்தார்த்தகன்.
அடுத்தப்படியாக அவர்கள் சென்ற முக்கியமான ஊர், மதுராபுரி.
“இங்கே தான் ‘பகவான் வாசுதேவன்’ என்று லட்சக்கணக்கான மக்கள் வழிபடும் தேவகி மைந்தரான கண்ணபிரான் பிறந்தார்” என்றான், சித்தார்த்தகன்.
அப்படிச் சொல்லும் போது மதுராபுரியையும், கிருஷ்ண புரியையும் மெகஸ்தனீசுக்குச் சுட்டிக் காட்டினான். அவை அருகருகே இருந்தன. கிருஷ்ணருடைய லீலைகளையும், பிருந்தாவனத்தில் அவர் கோபிகளுடன் நிலவொளியில் ஆடிய ராசக்கிரீடையையும் பற்றி கேட்கக் கேட்க மெகஸ்தனீசுக்குப் பின்னும் ஆவல் மூண்டது. அந்த வரலாறுகள் மிகவும் ரசமாக இருந்தன. “உங்கள் கிருஷ்ணர் எங்கள் டயோனிஷியஸ், ஹெராக்கிளிஸ் ஆகிய இருவரும் சேர்ந்த ஓர் அவதாரம் என்றே சொல்லலாம்“ என்றான். அவர்கள் கங்கைக் கரையிலுள்ள அஸ்தினாபுரத்துக்கு வந்தார்கள். சித்தார்த்தகன் அந்த இடத்தின் வரலாற்றையும், அது எவ்வளவு முக்கியமான நகரம் என்பது குறித்தும் தெரிவித்தான். அங்கே பழமையான சின்னம் எதுவும் இராது போகவே மெகஸ்தனீசுக்கு அதன்மேல் அவ்வளவு அக்கறை விழவில்லை. அடுத்தப்படியாக அவன் பார்த்த ஊர், ராதாபுரம்.
அங்கிருந்து கன்யாகுப்ஜத்துக்கும் பிறகு யமுனையும் கங்கையும் சேரும் பிரயாகைக்கும் வந்தார்கள். அதற்குப் பிறகு காசியை அடைந்தார்கள். சித்தார்த்தகன் பிரயாகையின் புண்ணிய வரலாற்றை மெகஸ்தனீசுக்குத் தெரிவித்து, கோட்டையிலுள்ள பிரபல ஆலமரத்தைக் காட்டினான்.
“தோற்றுப்போன அரசர்கள் கௌரவம் இழந்து வாழ்வதைவிட இறப்பது மேல் என்று, இந்த மரத்தின் கிளையிலிருந்து யமுனையில் வீழ்ந்து சாவது வழக்கம்“ என்றான். காசிக்கு வந்ததும், “பாரத நாட்டிலேயே இது மிகவும் புண்ணிய ஸ்தலம். இந்தக் கங்கை மிகவும் பரிசுத்தமானது. இந்த நாட்டுமக்கள் இதை வெறும் நீராகக் கருதுவதில்லை. அமித்தமாகவே எண்ணுகிறார்கள். இங்கே எல்லாருமே காசியில் கங்கைக்கரையில் இறக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். அப்படி இறந்தால் நிச்சயம் மோட்சம் கிட்டும் என்று உள்ளூர நம்புகிறோம்“ என்று மெகஸ்தனீசிடம் சொன்னான்.
அவர்கள் தட்சசிலையிலிருந்து புறப்பட்ட 66 ஆம் நாள் பாடலிபுத்திரம் வந்து சேர்ந்தார்கள். பிரயாணத்தின் போது மெகஸ்தனீஸ் சுற்றிலும் இருந்த வயல்களில் நெற்பயிர், தினை முதலிய தானியங்களையும், கரும்புப் பயிர்களையும், அங்கங்கே மரம் செடிகளில் இருந்த பலவகைப் பழங்களையும், இன்னும் கிழங்குகளையும், வளைந்து கொடுக்கும் மரக்கிளைகளையும் மொத்தத்தில் கங்கைச் சமவெளியின் பெருவளப்பத்தையும் கண்டு வியந்தான். கங்கையின் கிளைகளான யமுனை, கோமதி, சரயூ, கண்டகி ஆகிய ஒவ்வொன்றும் தனித்தனியே பெரிய ஆறுகளாகச் செல்வதையும், அங்கங்கே ஏரிகள் நிரம்பியிருப்பதையும் கண்டு மகிழ்ந்தான். பாடலிபுத்திரத்திற்கு அருகில் ஓரிடத்தில் வெள்ளம் பொங்கி ஓட, நதி ஒரு குரோசத்திற்குமேல் அகலமாக இருந்தது. கங்கைக்கு மேற்குப்பக்கம் இருக்கும் மக்களைக் கங்காபுத்தகன், மொத்தத்தில் அங்கே இந்தியர்கள் உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்தாலும் சுறுசுறுப்பாகவும் கம்பீரமான தோற்றத்தோடும் இருப்பதைக் கண்டான். அவர்கள் தம் சொந்தக் கிராமத்திலேயே இருக்க மிகவும் விரும்பினார்களே ஒழிய நகரத்தில் கட்டுப்பாடு இல்லாத வெறும் கும்பலில் வசிக்க விரும்பவில்லை. அவர்கள் எழுத்தறிவில்லாத பாமரர்களாக இருந்தாலும் உண்மையையும் நேர்மையையும் கடைப்பிடித்தார்கள். கொடுத்த வாக்கை மீறமாட்டார்கள். நகை முதலியவற்றை அடகு வைக்கும் போதும் எழுத்துமூலமாக ஒன்றும் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். வாயாலேயே பேசி முடித்துக் கொள்வார்கள் மிகவும் சிக்கனமாக வாழும் பழக்கம் உள்ளவர்கள், என்றாலும் நகை நட்டு என்றால், அவர்களுக்கு வெகு ஆசை. பெரிய குடும்பத்துப் பெண்கள் சரிகையும் ரத்தினமும் இழைத்த பொன்னாடைகளை உடுப்பார்கள். பூப்பொறித்து ரத்தினம் இழைத்த சேலைகளையும் உடுத்துவார்கள். பிரபுக்களின் பின்னே குடையேந்தி வருவார்கள். பணியாள்கள், அழகாய் இருக்க அலங்காரம் செய்துகொள்ள மிக ஆவல் கொண்டனர். எந்த விதத்திலாவது மேலும் அழகாகத் தாங்கள் தோன்றவேண்டும் என்று தான் விரும்பிச் செயல்பட்டார்கள். வீட்டிற்குக் காவல் வைக்காமல் அப்படியே விட்டுவைத்தார்கள். அந்நிலையிலும் திருடர்கள் அங்கே அணுகுவதில்லை. ஆதிகாலம் முதல் கர்ண பரம்பரையாக வழங்கி வந்த சட்டவிதிகளையே கடைப்பிடித்தனர். படித்து மனனம் செய்த ஸ்மிருதிகள் என்னும் நீதி நூல்களை அறிந்த அந்தணர் சட்ட விதிகள் சரிவர நடக்கத் துணைபுரிந்தனர்.
அங்கே அடிமைகளையும் காணவில்லை. அங்குள்ள மக்களை விசாரித்தபோது அடிமை வழக்கமே அங்கு இல்லை என்றும், ஓர் எஜமான் எதிரில் வேலையாள் குழைந்து வாழ்வதோ, அடிமையை எஜமான் மிரட்டுவதோ மேன்மை ஆகாது என்றும் சொன்னார்கள். இடுகாடுகளில் அமைத்த கல்லறைகள் ஆடம்பரமின்றி இருந்தன. பல ஜாதியார், பிணங்களைக் கொளுத்தி வந்தார்கள் என்றும், அந்த இடத்தில் எந்தவிதமான நினைவுச் சின்னமும் எழுப்புவதில்லை என்றும் தெரிந்தது. மக்கள் தாம் உயிரோடு இருக்கும் போது செய்த நற்செயல்களே, தாம் இறந்தபின் தங்களைப்பற்றி நினைவூட்டும் என்று கருதினார்கள். அந்த மக்களின் முக்கியமான உணவு அரிசியும் கறிகாய்களுந்தாம். தாழ்ந்த வகுப்பார் அரிசியிலிருந்து இறக்கிய ஒருவகைச் சாராயத்தைக் குடித்தார்கள். உயர்குலத்தார் அப்படிக் குடிப்பதில்லை. சித்தார்த்தகன் மெகஸ்தனீசிடம் ‘யாகயக்ஞங்கள் நடத்தும் போது தான் உயர்குலத்தார் மதுவை அருந்துவார்கள்” என்றான். மெகஸ்தனீசுக்கு இதைக் கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது. அங்கேயுள்ள மக்கள் தங்களுக்குப் பிடித்த சமயத்தில் தனித்தனியே உண்ணும் வழக்கத்தைக் கண்டு, “இதென்ன, விநோதமாக இருக்கிறதே! குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் இருந்து சேர்ந்து உண்ணுவதுதானே நல்லது அப்போதுதானே சமூக வாழ்வும் முன்னேறும்“ என்று மெகஸ்தனீஸ் சித்தார்த்தகனைக் கேட்டான்.
சித்தார்த்தகன், “அப்படிச் செய்டவது குடிகளுடைய சுதந்தரத்தைக் கட்டுப்படுத்துவதாகும். எங்கள் சட்ட விதிகளுக்கே புறம்பானது. அப்படிச் செய்தால் மக்களெல்லாம் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளம்பி விடுவார்கள்” என்றான். பாடலிபுத்திரத்தை அடைந்ததும் அரசாங்க விருந்தினர் தங்கும் மாளிகையில் மெகஸ்தனீசை அமர்த்தி, எல்லாவித வசதிகளும் செய்து கொடுத்தான் சித்தார்த்தகன் – தொடரும்
More Stories
வாழ்க்கை ஒரு நாடகம்..! வாழ்ந்து பார்த்தால் ஒரு குடும்பம்
உறவு கொண்டாடும் பாசமுள்ள அத்தைகள்..!