September 18, 2024

சாணக்கியரும் சந்திரகுப்தனும்

[responsivevoice_button voice=”Tamil Male”] கப்பற்படைத் தலைவன் வருகை

கேரளத்திலிருந்து சத்தியபுத்திரர்களின் நாட்டுக்குப் போனோம். அதன் தலைநகர் மங்களபுரம். கேரளத்தில் கிடைக்கும் பொருள்களே இங்கேயும் சற்றுக் குறைந்த அளவில் கிடைக்கின்றன. இவர்கள் பேசும் மொழி தமிழ் அல்ல. அதோடு சம்பந்தமுள்ள துளு என்ற பாஷை. ஒரே ஒரு முக்கியமான துறைமுகந்தான் உண்டு. இந்த நாடு மிகவும் சிறியது.

“பின்பு நாங்கள் கன்னட நாட்டுக்குச் சென்றோம். அங்கே கார்வார், ஹொன்னாவரம், சிவபெருமானுடைய பிரபல ஸ்தலமான கோகர்ணம், கன்னடித் தீவுகள், அஞ்சித் தீவு, சசிக்கிரீவத் தீவு, மர்மக்கிராமத் துறைமுகம் ஆகியவற்றையெல்லாம் போய்ப் பார்த்தோம். இந்தக் கடற்கரையில் கொள்ளைக்காரர்கள் ஏராளம். ஆனால், எங்கள் படையின் வலிமையைக் கண்டுகொண்டு இவர்கள் தலைமறைவாகவே இருந்தார்கள். கேரளக்கரையில் இவர்கள் தொல்லை இல்லை. அந்த நாட்டு அரசன் தன் கடற்படையைக் கொண்டு கரையைக் காத்துவருகிறான், பாண்டிய சோழர்களும் அப்படியே. “கடற்கொள்ளைக்காரர்கள் மலிந்த கன்னட நாட்டுக் கரையிலிருந்து வடக்கே அரண்யவாகம் என்ற மகாகாலவனம், ரத்தினகிரி, பாரிபட்டணம், மந்தர கிரி, விஜய துர்க்கம், தேவக்கிருகம், சம்பாவதி ஆகிய ஊர்களுக்குப் போனோம். ஆந்திர நாட்டின் பிரபலப் பெருந்துறைமுகமான கல்யாணிக்கும் சென்றோம். அங்கே தான்ய கேடம், பிரதிஷ்டானம் என்ற இரண்டு ஊரும் பெரிய நகரங்கள், தான்யகேடத்திலிருந்து நெல் முதலிய தானியமும், பிரதிஷ்டானத்திலிருந்து ஜவுளியும் வெளியூர்களுக்கு அனுப்புகிறார்கள். ஆந்திரர்களின் ராஜ்ஜியம் மேற்குக்கரையிலிருந்து கிழக்குக்கரைவரையில் பரவியிருக்கிறது. இரண்டு பக்கமும் கடற் கொள்ளைக்காரர்களின் தொல்லை இராதபடி ஆந்திரர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். கொள்ளைக்காரர்கள் என்று சந்தேகப்பட்டால் அவர்களுடைய உறவினர், அவர்களுக்கு இடம் கொடுப்பவர்கள் ஆகியவர்களைத் தூக்கிலிட்டு விடுகிறார்கள். அப்புறம் ஏன் அவர்கள் உபத்திரவம் இருக்கப்போகிறது!

“கல்யாணியிலிருந்து நம் துறைமுகமான சுராட், பிருகுகச்சம் ஆகிய இடங்களுக்கு வந்தோம். தபதி நதியின் முகத்துவாரத்தில் சுராட் நகரமும், நர்மதை கடலோடு கலக்கும் இடத்தில் பிருகு-கச்சமும் இருக்கின்றன. அங்கிருந்து உள்நாட்டில் இருக்கும் உஜ்ஜயினிக்குச் சென்றோம். அங்குள்ள நாட்டியப் பெண்களைப் போல் அழகும் ஆடல் பாடலில் வல்லமையும், ஆடவர்களை மகிழ்விக்கும் தன்மையும் உள்ளவர்கள் வேறு யாருமே இல்லை. அங்கிருந்து மீண்டும் பிருகுகச்சம் வழியாக நம் எல்லைக்குள் இருக்கும் சோமநாதப்பட்டணம், துவாரகை, மாண்டலி, பாதாளம் முதலிய ஊர்களுக்குப் போனோம். பிறகு, மறுபடியும் மேற்குக்கரையோரமாகவே கிழக்குக் கரைக்கு வந்து, முன் இறங்காத துறைமுகங்களைப் பார்த்துக் கொண்டே திரும்பினோம்.

“பிரபலமான பாம்பன், பாக் ஜலசந்ததிகளைக் கடந்து, தனுஷ் கோடியிலும் தலைமன்னாரிலும் நீராடியதும் ராமேசுவரத்தில் ராமநாத சுவாமியைத் தரிசித்தோம். ஆகா! அற்புதமாக இருந்தது. அந்தக் காட்சி, அந்தக் கடல்நுரை பொங்கி வருவதைப் பார்த்தாலே பாற்கடல் என்று அதற்குப் பெயர் வைப்பது பொருத்தம் என்று பட்டது. பிறகு, கொற்கை என்ற பிரபல பாண்டித்துறைமுகத்தை அடைந்தோம். அங்கிருந்து உலகில் எல்லா நாடுகளுக்கும் கப்பல்கள் புறப்பட்டுப் போய் வருகின்றன. செங்கல்லாலும் மரத்தாலும் கட்டிய அருமையான மாளிகைகள் அங்கே இருக்கின்றன. அவைகளில் முத்தும் பவழமும் வைத்து இழைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஊரிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுப் போய் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் ஆலயத்தில் அம்பிகையைத் தரிசித்தோம்.

“பிறகு காவேரிப்பூம்பட்டினம் வந்தோம். சோழர்களின் சிறந்த துறைமுகப்பட்டினம். அது எப்போதும் பண்டங்கள் ஏற்றுமதியாகிக் கொண்டும் இறக்குமதியாகிக் கொண்டும் இருந்தன. ரோமாபுரியுலிருந்தும் எகிப்து நாட்டிலுள்ள அலெக்சாண்டிரியாவிலிருந்தும் சில வர்த்தகர்கள் வந்து, இங்கே வீடு கட்டிக் கடைகளும் வைத்திருக்கிறார்கள். பாரசீகத்திலிருந்து அருமையான முத்துகள், மாதுளம் பழத்தில் இருக்கும் மணிகளைப் போன்ற கெம்புக் கற்கள், நீலத்தில் பொன்ரேகை ஓடும் ரத்தினக்கற்கள் ஆகியவை இங்கே ஏராளமாகக் கிடைக்கும். உள்நாட்டில் இருக்கும் உறையூர், ஆர்க்காடு போன்ற சோழர் தலைநகரங்-களுக்கும் போனோம். பெரிய பெரிய மாளிகைகள் அங்கே இருந்தன. அழகான ஊர்கள் அவை. நாகப்பட்டினம், புதுச்சேரி என்ற சோழர் துறைமுகங்களையும் பார்த்தோம். சோழர்களின் ஆதிக்கத்தில் பாண்டியர்களிடம் இருப்பதைவிடத் துறைமுகங்கள் அதிகம் என்றாலும் இவர்களை மாலுமிகள் என்பதைவிடச் சிறந்த போர்வீரர் என்று தான் சொல்ல வேண்டும். பிறகு, காஞ்சிக்குச் சென்றோம். நம் படைவீரர் அதைச் சமீபத்தில் கைப்பற்றினார்களே, உங்களுக்குத் தெரிந்திருக்குமே! அங்கு மிகவும் பிரபலமான காமாட்சியம்மன் கோயிலுக்குப் போயிருந்தோம். முன்னே காஞ்சியை ஆண்டுவந்த மோகூர் மன்னன் ஆதியில் நம்மை எதிர்த்தாலும் இப்போது அடங்கிவிட்டான். நம்மிடம் நட்போடு தான் இருக்கிறான்.

“அடுத்தபடியாக, ஆந்திர நாட்டின் கிழக்குக் கரையிலுள்ள மசூலிப்பட்டணத்-திற்குப் போனோம். அங்கே அருமையான மெல்லிய பருத்தி ஆடைகள் விசேஷம். அங்கே பேசும் மொழி தமிழோடு சம்பந்தப்பட்டது என்றாலும், பிராகிருதம், சமஸ்கிருதம் முதலிய சொற்கள் அதில் ஏராளமாக இருப்பதால் நம் மாகதிபோல் தோன்றுகிறது. அமராவதி, ராஜபுரம், தந்தபுரம் ஆகிய ஊர்களையெல்லாம் போய்ப் பார்த்தோம். அந்த மக்களின் பழக்க வழக்கம் நம்முடையதைப் போலவே தான் இருக்கிறது. தமிழ் நாகரிகத்தோடு அவ்வளவு ஒற்றுமை இருப்பதாகப்படவில்லை. கடைசியில் மசூலிப்பட்டணத்திலிருந்து தாமிரலிப்திக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் இப்படிப் போய்த் திரும்ப ஒரு வருஷம், நான்கு மாதம், மூன்று நாள் ஆயிற்று. மாலுமிகளுள் 345 பேரும், வியாபாரிகளுள் 840 பேருமே எஞ்சியிருந்தார்கள். பாதாளம் முதல் பாடலி வரையில் ஆளும் சக்கரவர்த்தியே! இனித் தங்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்.”

“கப்பல் பிரயாணத்தின் போது மாண்ட மாலுமிகள் முதலியவர்களின் குடும்பத்தாருக்கு, குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் பொன் தரும்படி உத்தரவிடுகிறேன். உயிரோடு திரும்பிய ஒவ்வொருவருக்கும் அப்படியே 500 பொற்காசுகள் அளிக்கிறேன். நம் கப்பற்கடையைப் பலப்படுத்த வேண்டும். இனி 1000 கப்பல்களாவது நம்மிடம் இருக்க வேண்டும். சமுத்திரநாதா, அதோடு நம் கப்பற்படைக்கு இன்னும் பத்து ஆண்டுகள் நீயே தலைவனாக நீடித்திருக்கும்படி ஏற்பாடு செய்கிறேன். எட்டி என்னும் (சிறந்த செட்டி) பட்டமும் அளித்தேன். ஆண்டு ஒன்றுக்கு 24,000 பொன் உனக்குக் கிடைக்கும்“என்றான், சந்திரகுப்தன்.

சமுத்திரநாத செட்டி, மன்னனை வணங்கியதும் அங்கிருந்த விடைபெற்றுப் புறப்பட்டான்.

தட்சசிலை உடன்படிக்கை கையெழுத்தாகி இரண்டு ஆண்டுகள் கழித்துக் கி.மு.301இல் தாலமி, லிசிமாக்கஸ், காசண்டர் ஆகிய கிரேக்கர்களுடன் சேர்ந்து செலூகஸ், ஆண்டிகோனஸ் என்ற கிரேக்கத் தலைவனோடும், அவன் மகனான டெமட்ரியஸ் என்பவ-னோடும் இப்ஸோஸ் என்ற இடத்தில் போர் தொடுத்தான். சந்திரகுப்தன் செலூகசுக்குத் தந்த யானைகளின் உதவியால் ஆண்டிகோனஸ் தோற்று மடிந்தான். அவனுடைய ராஜ்ஜியத்தை எதிரிகள் பங்கிட்டுக் கொண்டார்கள். செலூகசுக்குச் சிரியா முழுவதும் மேற்கு ஆசியாவில் பெரும்பகுதியும் கிடைத்தன. கி.மு.300 இல் செலூகஸ் தன் நண்பனும் தோழனுமான மெகஸ்தனீசை மௌரிய ராஜ சபைக்குத் தூதனாக அனுப்பினான். சந்திரகுப்தனுக்கு அரகோசியா நாட்டைக் கொடுப்பதற்குமுன் அங்கே கிரேக்கப்பிரதிநிதியாக இருந்த சிபிர்த்தியாஸ் என்பவனிடம் கெமஸ்தனீஸ் வேலை பார்த்து வந்தவன். அத்திப்பழம், சாராயம், ஒலிவ எண்ணெய், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, அருமையான கிரேக்கப் பாண்டங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பாரத நாட்டுக்குப் புறப்பட்டான். மெகஸ்தனீஸ், ஹரிவனம் என்ற பிரதேசத்தில் மௌரிய மண்டலாதிபதியாக இருந்த ஆரியமித்தரன், எல்லைப்புறத்திலுள்ள ஹரிஸ்தலம் என்ற நகரில் தட்சசிலையின் ராஜப்பிரதிநிதியாக இருந்த இளவரசன் பிந்துசாரனுக்குப் பதிலாக இருந்து மெகஸ்தனீசை வரவேற்றான். அந்தக் கிரேக்கத் தூதனைச் சந்திரகுப்தனின் அரசாங்க விருந்தினனாகக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு சித்தார்த்தகனைச் சேர்ந்தது. அவன்தான் அந்நிய நாட்டாரைக் கவனித்துக் கொள்ளும் குழுவின் தலைவன். சித்தார்த்தகன் மெகஸ்தனீசை உபசரித்து அங்கே இந்தியன் காக்கேஸஸ் என்று கிரேக்கர் வழங்கி வந்த பனிமலைச் சிகரங்களைக் காட்டி, “எங்கள் சாம்ராஜ்ஜியத்தில் சேர்ந்த பிறகு இந்த மலைக்கு ஹிந்துகோ என்று பெயரிட்டிருக்கிறோம்” என்று பெருமையோடு சொல்லிக் கொண்டான்.

சித்தார்த்தகன் உதபாண்டபுரம் வழியாக மெகஸ்தனீஸை அழைத்துச் சென்றான். அழகிய ராஜாங்கத்தோணி ஒன்றில் அவர்கள் சிந்து நதியைக் கடந்தார்கள். கூடவே இன்னிசை முழங்கியது. “இப்படித்-தான் விருந்தினரை நாங்கள் வரவேற்பது வழக்கம்“என்றான், சித்தார்த்தகன், தட்ச சிலையில் இளவரசன் பிந்தசாரன் மெகஸ்தனீஸை வரவேற்றான். அவனைக் கௌரவிக்க ஒரு விருந்தும் வைத்தான். தானும் மெகஸ்தனீஸ் அத்த அத்திப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றை உண்டு சாராயத்தைப் பருகிக் களித்தான். முக்கியமாக, அந்த அத்திப் பழங்கள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாய்த் தெரிவித்து, “இந்த மாதிரி இனிமையான பழத்தையே நான் தின்றதில்லை இதுவரை” என்றான்.

தட்சசிலையிலிருந்து மெகஸ்தனீஸ் ராஜபாட்டை வழியாகப் பாடலிபுத்திரத்துக்குப் புறப்பட்டான். 48 அடி அகலமுள்ள அந்தப் பாட்டையின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் இருந்தன. குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு தரம் தொலைவைக் காட்டும் கற்களை நிலை நிறுத்தியிருந்தார்கள். அங்கங்கே தாகத்துக்கு ஒரு சத்திரமும், அருகருகே கிணறுகளும் இருந்தன. அவற்றையெல்லாம் பார்த்த மெகஸ்தனீசுக்கு அவை மிகவும் பிடித்திருந்தன.

“அருமையான பாட்டை. ஆனால், போர்க்காலத்தில் பகைவன் எளிதில் முன்னேறிவிடலாம்” என்றான்.

“பகைவன் முன்னேறுவதற்கல்ல, அவனை விரைவில் துரத்துவதற்குத்தான் இது மிக வசதியாயிருக்கும்“என்றான், சித்தார்த்தகன்.

மெகஸ்தனீஸ் விதஸ்தை நதியைக் கடக்கும்போதும், புக்கிபாலையில் அவன் ரதம் செல்லும்போதும் சித்தார்த்தகன், முன்னே ஒரு சமயம் அலெக்ஸாண்டர் எங்கே முகாம் போட்டுச் சபை கூட்டினான் என்று மெகஸ்தனீசுக்குக் காட்டினான். அலெக்ஸாண்டர் தன் வீரத்தைக் காட்டிய அந்த மாதிரி இடங்களையெல்லாம் பார்க்கப் பார்க்க மெகஸ்தனீசுக்குப் பேராவல் மூண்டது. ஆனால் நிகையா, புக்கிபாலை ஆகிய ஊர்களில் இருந்த கிரேக்கர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள் என்பதைக் கேட்டதும் வருத்தமுற்றான்.

விபாசை நதிக்கரையிலிருந்த ராஜகிரியில் அலெக்ஸாண்டர் கட்டிய ஆலய பீடங்கள் அப்படியே இருப்பதையும், அவைகளில் இந்து தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்திருப்பதையும் கண்டான். மௌரிய ராஜ குடும்பத்தார் கூட அந்தப் பக்கம் போகும்போது அங்கே வழிபடுவதாகத் தெரிந்தது. “சரியான யோசனைதான், கிரேக்கர் இந்தியர் ஆகிய இருவருடைய வழிபாட்டு முறையையும் இணைத்துவிட்டீர்களே! பரவாயில்லை! மொத்தத்தில் தெய்வங்களெல்லாம் ஒன்றுதான் வழிபடுவோரிடையேதான் வேற்றுமை. விரைவிலேயே இருசாராருக்கும் பரஸ்பரம் நட்பும் பற்றும் ஏற்பட்டுவிடும்” என்றான். பிறகு, அவர்கள் யமுனைக்கரையில் உள்ள இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்து சேர்ந்தார்கள். சித்தார்த்தகன் அங்கே பாண்டவர்களுடைய அரண்மனையின் இடிந்த பகுதிகளைக் காட்டி மகாபாரத யுத்தத்தைப் பற்றியும் தெரிவித்தான்.

–  தொடரும்