November 10, 2024

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன்பிறகு தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நான் தான் என்று கூறி வரும் சசிகலா அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வந்தார்.

இது அ.தி.மு.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சசிகலாவுடன் போனில் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கினார்கள். சசிகலாவுடன் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால் கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அ.தி.மு.க.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாடப்படும் இந்த சூழலில் சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் இறங்கி உள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்திய அவர், எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா’ என்ற கல்வெட்டும் வைக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக சசிகலா மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்து இருந்த அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை. அவர் பொழுதுபோகாமல் பேசிக் கொண்டு இருக்கிறார். சூரியனை பார்த்து… என்று தொடங்கும் ஒரு வரியை சொல்லி, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பதில் அளித்தார்.

அ.தி.மு.க. கட்சி நாங்கள் தான். சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. இதை கோர்ட்டும் சொல்லிவிட்டது. தேர்தல் கமி‌ஷனும் கூறி விட்டது என்று பரபரப்பாக பேட்டி அளித்தார்.

இந்த சூழலில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரையில் பேட்டி அளித்த போது, “சசிகலா அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கையில், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்கள் விருப்பம் ஆகும். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கம். தொண்டர்கள் இயக்கமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” என்றார்.

அப்போது சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி சர்ச்சைக்குரிய முறையில் விமர்சித்து பேசியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அரசியலில் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் கூறினார்.

இந்த பேட்டி அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி குறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேற்று உடனே பதில் அளித்தார்.

சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என தெளிவான முடிவை அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். எனவே சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை என்று கூறினார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டார். அதில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் கையெழுத்து போட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திதான் ஓ.பன்னீர்செல்வம் முதலில் வெளியே வந்தார் என்றும் கூறி இருந்தார். அ.தி.மு.க.வில் சசிகலா விவகாரம் இப்போது பெரும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

சசிகலா

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து இதற்கு நேர்மாறாக உள்ளது. இது கட்சியில் விவாத பொருளாக மாறி வருகிறது. தலைமைக்கழக நிர்வாகிகள் ஒன்று கூடி இதில் என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அ.தி.மு.க.வின் பொதுக்குழு வருகிற டிசம்பர் மாதம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலாவை சேர்ப்பதா? வேண்டாமா? என்பது குறித்து காரசார விவாதம் கண்டிப்பாக இடம்பெறும். இதில் ஒரு முடிவு தெரிந்து விடும்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சசிகலா வி‌ஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை மவுனம் காப்பதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி மதுரை செல்கிறார். அங்கிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

அப்போது அவர், நிருபர்களை சந்திக்கும்போது சசிகலா விவகாரம் குறித்து தெளிவுப்படுத்துவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து குறித்தும் தனது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.