November 3, 2024

கோபம்குறைத்தால்ஆயுள் நீளும்! அடங்காக்கோபம் உறவுகளை சேதாரப்படுத்தும்!

கோபம் கூட இங்கே ஒரு ஆயுதமாகி விட்டது. இந்த ஆயுதத்தை எதற்குத்தான் எடுப்பது என்பதும் இல்லாமல் போய்விட்டது. இப்படிச் சொல்வதற்காக கோபப்படாதீர்கள். கோபப்படாதீர்கள் என்பது முதலில் உங்கள் நலனுக்காகத் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கோபப்படுவது உங்கள் உடல் நலனுக்கு வேட்டு வைக்கிறது. 10 விநாடிகள் நீங்கள் வெளிப்படுத்துகிற கோபத்தில் இருந்து, உங்கள் உடல் மீண்டு வரவேண்டும் என்றால் 8 மணி நேரம் ஆகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்தளவுக்கு கோபத்தினால் உங்கள் உடலில் அதிர்வுகளும், பாதிப்புகளும் ஏற்படுகின்றன. “சார் பயங்கர கோபக்காரர்… அவருக்கு கோபம் வந்துச்சுன்னா என்ன செய்வார்னே தெரியாது. யாரும் அவர் எதிரே நிற்க முடியாது” – இப்படி சொல்லிச் சொல்லியே இந்த சமூகம் ஒருவரை தொடர்ந்து கோபக்காரராக வைத்திருக்கிறது என்பது உண்மை.

கோபம் வருகிறபோது, உங்கள் உடலின் உள்ளுறுப்புகளுக்கு செல்கிற ரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்து போகும். அமிலங்களோ எக்கச்சக்கமாய் சுரக்கும். இதுதான் உடல் நலன் கெட அஸ்திவாரம் போடுகிறது. குறிப்பாக கோபப்படுகிற போது அட்ரினல் சுரப்பிகள் அதிகமாக சுரக்கின்றன. இதுதான் நாம் தொடர்ந்து இயல்பாக செயல்பட முடியாமல் நமக்கு கடிவாளம் போட்டு விடுகிறது. நீங்கள் ஒன்றைக் கவனித்து இருக்-கிறீர்களா?

நீங்கள் கோபப்பட்டு, கோபத்தில் கத்தி முடித்து விட்ட பின்னர் உங்கள் உடல் சோர்ந்து போகும். கைகால்களில் வலி எடுக்கும். தலை வலிக்கத் தொடங்கும். கார்ட்டிஸால் என்று அழைக்கப்படுகிற ஹார்மோன் அதிகளவில் சுரந்து உள்ளுறுப்புகளை சேதாரப்படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு முறை கோபப்பட்டாலே இந்த பாதிப்பு என்றால் ஒரு நாளைக்கு நாம் எத்தனை முறை கோபப்படுகிறோம் என்று யோசித்துப்பாருங்கள்.

சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கோபப்-படுவது என்பது கை வந்த கலை. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார்கள். வெளியே செல்ல மனைவி புறப்பட தாமதம் ஆகி விட்டதா? பள்ளிக்கு சென்ற பையன் திரும்ப கால தாமதமா? ஸ்கூல் பஸ் வரநேரமாகி விட்டதா? காருக்கு பெட்ரோல் போட பெட்ரோல்பங்கில் நேரம் ஆகிறதா? ஆபிசில் நீங்கள் அழைத்த நேரத்தில் உங்கள் உதவியாளர் வந்து சேரவில்லையா? ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கப்போனால் அவுட் ஆப் சர்வீஸ் என்ற போர்டு தொங்குகிறதா? ஓட்டலில் நீங்கள் போய் சாப்பிட உட்கார்ந்து 5 நிமிடமாகியும் சர்வர் வரவில்லையா? ஒவ்வொன்றுக்கும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதா?

இது நல்லதில்லை. கோபம் அதிகரிக்க அதிகரிக்க உயர் ரத்த அழுத்தம் எகிறும், இது ஆபத்தானது. இதுவரை நாம் பார்த்தது உடல் ரீதியான பாதிப்புகள், மன ரீதியிலான பாதிப்புகளையும் கோபம் ஏற்படுத்தி விடும். வீட்டிலே மனைவியிடம், பிள்ளைகளிடம், உடன்பிறந்த தம்பி, தங்கையிடம், அம்மா, அப்பாவிடம் கோபப்படுகிறபோது அது உறவுகளில் சேதாரத்தை ஏற்படுத்தி விடும். தொடர்ந்து கோபப்பட்டு கொண்டே இருந்தால் நீங்கள் வீட்டில் தனித்தீவாகத்தான் ஆக வேண்டியதிருக்கும். உங்களைக் கண்டாலே மற்றவர்கள் விலகிச்செல்ல தொடங்கி விடுவார்கள். உங்களைப் பார்த்து சினேகமாய் சிரிக்கக்கூட ஆளிருக்காது.

ன்றை நீங்கள் யோசித்துப்-பார்த்தது உண்டா? கோபப் படுவதற்கு பின்னால் இருப்பது ஒரு மாயை, ஒரு தவறான நம்பிக்கைதான். நாம் கோபப்பட்டால் எல்லாம் சரியாக நடந்து விடும் என்று நினைத்து கோபப்படுகிறவர்கள் உண்டு. இல்லை நீங்கள் கோபப்பட்டாலும், கோபப்படாவிட்டாலும் எது எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படித்தான் நடக்கும். உங்கள் கோபம் யாரையும் மாற்றிவிடும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் தோல்வியைத் தான் தழுவுவீர்கள்.

“அவர் கிடக்கிறார். கத்திக்கிட்டே கிடப்பார். அவரை கண்டுக்கவே கூடாது என்று மற்றவர்கள் கண்டு கொள்ளாமல் அவர்கள் இயல்பில் தான் போய்க் கொண்டிருப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. இன்னும் சிலர் நான் ஆபீசில், வீட்டில் கோபப்படாவிட்டால் எல்லோரும் என் தலை மீது ஏறி விடுவார்கள் என நினைப்பது உண்டு. இதுவும் தவறான நினைப்பு தான். யாரும் உங்களுடன் மோத வேண்டும் என்றோ, கோபத்தை கிளற வேண்டும் என்றே நினைப்பதில்லை. அவரவர் வேலைக்கே அவரவருக்கு நேரம் போதவில்லை. ஓடிக்கொண்டேதான் இருக்-கிறார்கள் என்பதை உணருங்கள்.

கோபத்தில் இருந்து வெளியே வர பழகுங்கள். அது உங்களுக்கு நல்லது செய்யும். உங்கள் ஆயுளை நீட்டிக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மனசு லேசாகும். கோபத்துக்கு பதிலாக சினேகமாக சிரித்து விட்டு போய் விடுங்கள். அந்த சிரிப்பே, தவறு செய்த எதிராளியின் மனசாட்சியை உலுப்பி அவர் சரியாக செயல்படுவதற்கு வழிநடத்தும்.

கோபப்படுகிறவர்கள் முதலில் தினமும் காலையில் 15 நிமிடம் ஆழ்நிலை தியானத்தில் இருந்து பழகுங்கள். இது உங்கள் கோபப்படுகிற குணத்துக்கு நாளடைவில் சமாதி கட்டி விடும்.

அதையும் மீறி கோபம் வருகிறதா? ஒரு காகிதத்தில் எழுதுங்கள். உங்களுக்கு யார் மீது எதற்கெல்லாம், எப்போதெல்லாம் கோபம் வருகிறது என்று. அந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் கோபப்படாமல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்று விடுங்கள் அல்லது கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனதுக்குள் 1,2, என்று 100 வரை எண்ணத் தொடங்கிவிடுங்கள். எண்ணி முடிப்பதற்குள் உங்கள் கோபம் வடிந்து போய்விடும்.

அதையும் மீறி கோபம் வருகிறதா? யார் மீது கோபம் வந்தாலும் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுங்கள். திட்டித்தீர்த்து விடுங்கள் எழுத்தில், எழுதி முடித்து விட்டு அதைக் கிழித்து போட்டு விடுங்கள். கோபத்துக்கு வடிகால் அதுதான். வீட்டில் யாரிடமும் எதற்கும் கோபப்படக்கூடாது என நினையுங்கள். எல்லோரிடமும் மென்மையான வார்த்தையான வார்த்தைகளை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் மீது மற்றவர்களுக்கான அன்பும், மரியாதையும் கூடும்.

மொத்தத்தில் கோபத்தை நீங்கள் விட்டொழிக்கிற போதுதான் உங்கள் வாழ்வு சிறக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். அடங்காக்கோபம் ஒரு போதும் நல்லதல்ல.