November 10, 2024

கொரோனா பீதியால் உடுமலையில் வெறிச்சோடிய சுற்றுலாத்தலங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து 976 ஆக உள்ளது. நேற்று, 34 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து 18 ஆயிரத்து 482 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்புக்குள்ளான 45 பேருடன் சேர்த்து 270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 224 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தநிலையில் கொளுத்தும் கோடை வெயில் மற்றும் கொரோனா தொற்று பீதி காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக திருமூர்த்தி மலை, பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில், அமராவதி அணை, முதலை பண்ணை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகே நடை பாதையில் வடுமாங்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி, இலந்த வடை, கம்மங்கூழ் நீர்மோர் உள்ளிட்ட கோடை கால உணவு வகைகளை விற்பனைக்கு கொண்டு வரும் சிறு வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் வியாபாரம் நடக்காமல் வீடு திரும்பும் நிலை நீடிக்கிறது.

இதுபோல் அமராவதி அணையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அணையின் கரையோரம் டேம் மீன்கள் பொரித்து விற்பனை செய்யும் கடைகளில் மீன்களை வாங்கி சுவைப்பது வழக்கம். அப்பகுதியில் உள்ள ஓட்டல்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு முதல் தற்போது வரை சிறுகுறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையை சென்றடைந்துள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதாலும், கொரோனா வேகமாக பரவி வருவதாக ஏற்பட்ட பீதியாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளி யேறுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகேயுள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.