கொரோனாவின் முதல் அலை ஓய்ந்து, தற்போது 2-வது அலை வீசி வரும் வேளையில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் முதல் அலையின்போது கடந்த அக்டோபர் மாதம் உச்சத்தை எட்டிய நோய்த்தொற்றின் எண்ணிக்கை, 2-வது அலையில் தற்போது 80 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
கான்பூர் ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மனிந்திர அகர்வால் தலைமையிலான விஞ்ஞானிகள் ‘சுத்ரா’ என்ற கணித மாதிரியை பயன்படுத்தி கொரோனாவின் போக்கை கண்டறிந்து உள்ளனர். முதல் அலையின்போது இதே கணிதமுறையை பயன்படுத்திதான் ஆகஸ்டு, செப்டம்பரில் உச்சம் பெற்று, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நோய்த்தொற்று வீழ்ச்சி அடையும் என கூறப்பட்டது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
அதைப்போல 2-வது அலையின் போக்கையும் கடந்த பல நாட்களாக ஆராய்ச்சி செய்து முடிவை தெரிந்துள்ளனர். பீட்டா, ரீச் மற்றும் எப்சிலன் ஆகிய 3 அளவீடுகளை பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது. ஆராய்ச்சி முடிவில், ‘‘இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் 2-வது அலை இந்த மாதத்தின் மத்தியில் உச்சம் பெற்று, மே மாத இறுதியில் வீழ்ச்சி அடையும்” என கூறியுள்ளனர். உச்சநிலையை அடையும்போது தினசரி நோய்த்தொற்றின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கு மேலும், கீழும் ஏறி இறங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
அதைப்போல இன்னும் சில நாட்களில் நாட்டிலேயே நோய் பரவலின் முதல் மாநிலமாக பஞ்சாப் மாறும் என்றும், மராட்டிய மாநிலம் அதனை பின்தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
உச்சநிலையை அடையும் கொரோனா நோய்த்தொற்று, குறையும்போது மிக வேகமாக செங்குத்தான சரிவை கண்டு வீழ்ச்சி அடையும் என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த வீழ்ச்சியானது ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, அரியானா மாநிலத்தின் அசோகா பல்கலைக்கழக விஞ்ஞானி கவுதம்மேனன் தலைமையிலான விஞ்ஞானிகள் தன்னிச்சையாக மேற்கொண்ட ஒரு ஆய்வில், ஏப்ரல் மத்தியில் இருந்து மே மாத மத்திக்குள் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் என கண்டறிந்து உள்ளனர்.
More Stories
தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பட்டியல் இனத்தவர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு
உலகின் இளம் வயது ஆடிட்டர் நந்தினி அகர்வால் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்: