November 3, 2024

குடும்ப அரசியலும் பிரதமர் மோடியும்…!

இந்திய அரசியல் அமைப்பு சட்டதினம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நரேந்திர மோடி அவர்கள் குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியல் குறித்து காரசாரமாக பேசியுள்ளார். குறிப்பாக குடும்ப அரசியல் வாரிசு அரசியல் என்ற கோஷம் முதன் முதலில் எழுந்தது தமிழ்நாட்டில் இருந்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழலுக்கு எதிரான ஆட்சி அமைப்பாம் என்று கூறி காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பாஜக கட்சி கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த கால தமிழ்நாட்டு ஆட்சியில் இருந்த அதிமுக கழகம் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் ஆட்பட்டு தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது. இந்த ஊழல் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய தற்போது உள்துறை அமைச்சர் அமிர்ஷா அவர்களும், பிரதமர் மோடி அவர்களும் அதிமுக ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய அதே வேளையில் அதிமுகவுடனான தேர்தல் உடன்படிக்கை செய்துக் கொண்டு தேர்தலை சந்தித்தப் பொழுது அதிமுக ஆட்சியை இழந்தது. பாஜக கட்சிக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள்.

ஆனால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் அரசியல் சட்டம் இயற்றிய அண்ணல் அம்பேத்கார் அவர்களை பாராட்டியும் புகழ்ந்தும் பேசிய பிரதமர் மோடி அவர்கள் குடும்ப அரசியல் வாரிசு அரசியல் பற்றி தீவிரமாக பேசி இருப்பது எதற்காக இப்படி பேசுகிறார் என்றும் யாரை குறிவைத்து பேசுகிறார் என்றும் ஒரு புரியாத புதிராக இருக்கும் தருணத்தில் தனது அமைச்சரவையில் கூட வாரிசு அடிப்படையில் சில அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துக் கொண்டு இப்படி பேசுவது காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் குறிவைத்து பேசுவதாகவும் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள வாரிசு அரசியலையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார் என்று டெல்லி வட்டாரம் கூறுகின்றது.

வாரிசு அரசியல் என்று பட்டியல் இட்டால் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தங்கள் வாரிசுகள் பதவிக்கு வந்துவிடுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். ஆனால் காங்கிரஸ் கட்சி, திமுக ஓய்.எஸ்.ஆர்., சமாஜ்வாஜ் பார்ட்டி, போன்ற கட்சிகளில் வாரிசு அரசியலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் தலைமை பதவிக்கு தங்கள் வாரிசு மட்டுமே வரமுடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் பாஜக கட்சியில் யார் வேண்டுமானாலும் தலைமை பதவிக்கு வரலாம் என்ற நிலை இன்றும் தொடர்கிறது. உதாரணமாக அத்வானி, ராஜ்நாத்சிங், அமிர்ஷா, ஜே.பி.நட்டா இப்படி பல தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் பல கட்சிகளுக்கு நிலை இல்லை என்பது புரிய வேண்டியவர்களுக்கும் தெரியவேண்டியவர்களுக்கும் தெரியும்.

ஆகவே மோடி வாரிசு அரசியல் என்ற முழக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. அலட்சியப்படுத்த முடியாது.

-டெல்லிகுருஜி